இலக்கியத்தில் அறிவியல் (Science in Literature)

                                                திருக்குறளில் அறிவியல் வளம்

(1995-இல் திருச்சி,திருக்குறள் பேரவை வெளியிட்ட திருக்குறள் வளம் என்ற நூலில் இடம்பெற்ற கட்டுரை)

     அறிவினை அடிப்படையாகக் கொண்டு அதன் மூலமாகப் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளை, புதிய உண்மைகளைக் கண்டறிவதே அறிவியலாகும். வள்ளுவப் பெருந்தகை தமது குறட்பாக்களின் மூலம் உலகிற்குப் பற்பல வாழ்வியல் உண்மைகளை, சமூகவியல் கருத்துக்களை, மெய்யியல் உணர்வுகளைத் தந்துள்ளார். வள்ளுவர் தம் சிந்தனைகளைக் குறுகிய பாவடிவத்தின் மூலம் தந்திருக்கிறார் என்றால் அதற்கு அவர் கையாண்ட வெளிப்பாட்டு உத்தி நம்மை வியக்க வைக்கிறது. அறம் பொருள் இன்பம் தொடர்பாகத் தாம் கூறவந்த கருத்துக்களைத் தமிழருடைய நடைமுறை வாழ்வில் அவர்களுக்கு அறிமுகமான அறிவியல் செய்திகளை உவமைகளாகப் பயன்படுத்திக் கூற வந்த கருத்தைத் தெளிவுபடுத்துகிறார். மரத்திலிருந்து ஆப்பிள் பழம் வீழ்வதைக் கண்டோர் எண்ணிறந்தவர். ஆனால் நியூட்டன் மனத்தில் மட்டும்தான் அந்த நிகழ்ச்சி ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது., சிந்திக்கத் தூண்டியது. வள்ளுவரும் தம் அனுபவங்களை அறிவியல் நோக்கோடு கண்டுணர்ந்து தம் கொள்கை விளக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார். அவருடைய பாக்களிலே இயல்பியல், கணிதவியல், விலங்கியல், தாவரவியல், வேளாண்மையியல், மருத்துவ  யல், மரபணுவியல், உளவியல், வணிகவியல், பொருளியல் சிந்தனைகள் ஊடுருவி நிற்கக் காணலாம். இவற்றுள் கணிதவியல் முதலாக மருத்துவ இயல் ஈறாக உள்ள அறிவியல் தத்துவங்கள் இங்கு பேசப்படுகின்றன.

இயல்பியல் சிந்தனைகள்

     பொருள்களின் இயல்பைப் பற்றிய அறிவியல் இயல்பியல். உலகமானது நிலம், நீர், காற்று, தீ, வான் ஆகியவற்றால் ஆனது என்ற கருத்தில் பஞ்சபூதங்கள் என்று குறிப்பிடுவர். இவற்றின் இயல்புகள் குறட்பாக்களில் வெளிப்படுகின்றன.

நிலம்

நிலம் கடினத்தன்மையுடையது; இக்கடினத்தன்மை வள்ளுவரால் பொறுமை என்ற பண்பின்மேல் ஏற்றப்பட்டது. தம்மை இகழ்வாரைக் கூடப் பொறுக்க வேண்டும் என்று அறிவுறுத்துமிடத்து நிலத்தினியல்போடு இணைத்துப் பார்க்கிறார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.                                             (151)

நீரின் இயல்பு

             நீரின் இயல்பு மற்றும் அதன் வகைகள் பற்றிய குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. மழைநீர், ஊற்றுநீர் என இரு புனல்களைக் கூறுகிறார். ப்புரவு அறிந்து ஒழுகுதலின் பெருமை கூறுமிடத்து மழையின் இயல்பு உவமிக்கப்படுகிறது.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
        என்ஆற்றும் கொல்லோ உலகு.                                           (211)

உவர் நிலத்து நீர் உப்பாக இருப்பது போன்று மழைநீர் தான் கலக்கும் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப அமையும்.

நிலத்துஇயல்பான் நீர் திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
        இனத்துஇயல்பது ஆகும் அறிவு.                                         (452)

செம்புலப்பெயர் நீர் போல உள்ளம் ஒன்று கலந்த காதலரைச் சங்க இலக்கியம் காட்டும். நீர் தான் நின்ற நிலத்தினது தன்மையைப் பெறுவதை வள்ளுவம் காட்டும்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
        நீர் இயைந்து அன்னார் அகத்து.                                             (1323)

     நிழலில் இருந்த நீர், அதாவது சோலைகள் சூழ்ந்த நீர்நிலை தன்மை உடையதாக இருக்கும். அது போலவே ஊடலும் அன்புடையாரிடத்து இனிமை பயப்பது என்பர்.

நீரும் நிழலது இனிதே புலவியும்
        வீழுநர் கண்ணே இனிது.                                                           (1309)

     இதற்கு உரை எழுதிய பரிமேலழகர்நிழல்கண் இருந்த நீரில் குளிர்ச்சி மிக்குத்  தாகம் தணித்தலின் இனிதாயிற்றுஎனபர்.

                இறைக்க இறைக்க ஊறும் நீர் போல் பிறரறியாமல் மறைக்க மறைக்க வெளிப்படும் தன்மைத்தது காமம் என்பதால் ஊற்று நீரின் தன்மை காட்டப்படுகிறது.

மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
        ஊற்றுநீர் போல மிகும்.                                                              (1161)

     கற்கக் கற்க அறிவு ஊற்றெடுக்கும். கற்ற கல்வியின் அளவிற்கேற்ப அறிவு பெருகும். அதே போன்று தோண்டத் தோண்ட, தோண்டிய அளவிற்கு ஏற்றாற்போல நீர் ஊறும். கிணற்றின் ஆழத்திற்கு ஏற்ப நீர்நிலை உயரும் என்ற குறிப்பு இடம் பெறுகிறது.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
        கற்றனைத்து ஊறும் அறிவு.                                                  (396)

காற்று

காற்றானது வளி, கால் ஆகிய சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
        போழப் படாஅ முயக்கு.                                                          (1108)

காற்றைக் கிழித்துச் செல்லும் நெடுந்தேர் நிலத்து ஓடும்; நாவாய் கடலோடும் என்று கூறும் குறள் வருமாறு

கடல்ஒடா கால்வல் நெடுந்தேர் கடல்ஒடும்
        நாவாயும் ஒடா நிலத்து.                                                           (496)

நெருப்பு

தீயின் வெப்பத்தன்மையும் குறளில் காட்டப்படுகிறது. தீயின் பக்கம் நெருங்கினால் அது சுடும்; விட்டு விலகிச் சென்றால் சுடாது. அது தீயின் ன்மை. ஆனால் தலைவியின் காமத்தீயோ, பஞ்சபூதங்களுள் ஒன்றான இத்தீயின் இயல்புக்கு நேர்மாறானது. காதலன் நீங்கினால் சுடும் தன்மையும் நெருங்கினால் குளிர்ச்சி தரும் தன்மையும் உடையது தீ. இந்த இயல்புடைய தீ இவ்வுலகின் கண் இல்லாதது. இத்தீயை அவள் எவ்வுலகத்தில் பெற்றாள்? என்பர் பரிமேலழகர்.

நீங்கின்தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
        தீயாண்டுப் பெற்றாள் இவள்.                                                 (1104)

உருவப்பொருளான தீயினால் ஏற்பட்ட புண் ஆறும். நாவினால் சுட்ட அருவப்பொருளான தீச்சொல் தரும் புண் ஆறாதது.

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
        நாவினால் சுட்ட வடு.                                                                (129)

வானம்

வான் பற்றிய செய்திகளுள் முக்கியமான இரண்டினை வள்ளுவர் கூறியிருக்கக் காணலாம். ஒன்று வானின்று இழியும் மழை; மற்றொன்று சந்திரகிரகணம் பற்றிய செய்தி;

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
        பசும்புல் தலைகாண்பு அரிது.                                                (16)

சந்திரனின் மீது பூமியின் நிழல் படிவதனால் சந்திரன் குறிப்பிட்ட நேரத்திற்குச் சிறிது சிறிதாக மறைந்து பின்னர் வெளிப்படுகிறான். இது அறிவியல் செய்தி. இதனைக் கிரகணம் பிடித்தல் என்று சொல்வார்கள். உலகியல் ரீதியாக, திங்களைப் பாம்பு விழுங்கிப் பின்னர் உமிழ்ந்தது என்ற கருத்து மக்களிடையே இருந்தது. இக்கருத்து குறளிலே வெளிப்படுகிறது.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
        திங்களைப் பாம்புகொண் டற்று.                                          (1146)

ஒளியியல் சிந்தனைகள்

ஒளியியல் சிந்தனைகளும் குறட்பாக்களிலே விரவிக்கிடக்கின்றன. ஆடி அல்லது பளிங்கு போன்ற பளபளப்பான பொருள்களின் மீது  அவற்றையடுத்து வரும் பொருளின் பிம்பம் விழுகிறது. எனவே தன்னைத் தடுக்கும் உருவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையுடையது பளிங்கு. அவ்வாறு பிரதிபலிக்கும்போது அப்பொருளின் நிறமும் பளிங்கிலே பிரதிபலிக்கும். இச்செய்தியைக் குறிப்பு அறிதல் பற்றிக் கூறும் போது தருகிறார். பளிங்கு எவ்வாறு தன்னை அடுத்த பொருளினது நிறத்தைக் காட்டுமோ அதுபோல முகமானது நெஞ்சத்து உணர்வைப் பிரதிபலிக்கும் தன்மையது.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
        கடுத்தது காட்டும் முகம்.                                                        (706)

பொருள்களில் ஒளி ஊடுருவும் தன்மையை மற்றொரு குறள் காட்டுகிறது. நல்ல மணியில் ஒளி ஊடுருவ முடியும். அந்த மணியை நூலிலே கோத்தால், ஒளி ஊடுருவல் காரணமாக நூல் நம் கண்ணுக்குப் புலனாகும்.

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
        அணியில் திகழ்வதுதொன்று உண்டு.                               (1273)

ஒளியின் செறிவு (Intensity of Light) பற்றிய செய்தியும் ஒரு குறளில் இடம்பெறுகிறது. ஒளியின் செறிவு குறையக் குறைய அந்த இடத்திலே இருள் பற்றுவதை விளக்கு அற்றம் பார்க்கும் இருள்என்ற அடியின் மூலம் குறிப்பிடுகிறார்.

விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
        முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு.                                        (1186)

கணிதவியல் சிந்தனைகள்.

எழுத்தறிவும் எண்ணறிவும் அனைவரும் பெறவேண்டும் என்பது இக்கால அறிவொளி முழக்கம். இச்சிந்தனை குறளில் வலியுறுத்தப்படுகிறது.

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
        கண்என்ப வாழும் உயிர்க்கு.                                                  (392)

அவர் காலத்து வழக்கிலிருந்த எண்ணும்முறை பற்றிய செய்தியும் வெளிப்படுகிறது. எண்ணிக்கைக்கு விரலால் அடையாளக் குறியிடும் வழக்கம் இருந்தது. தலைவனைப் பிரிந்த தலைவி, அவன் தன்னைப் பிரிந்து சென்ற நாளைக் கணக்கிட விரலால் அடையாளம் இடுகிறாள். இவ்வாறு நாளொன்றுக்கு ஒரு குறியீடு எனப் பலநாள் குறிதொட்டு வைத்து அவள் விரல்கள் தேய்ந்து விட்டன என்பதை நாளொற்றித் தேய்ந்த விரல்என்ற சொற்றாடர் காட்டுகின்றது.

வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
        நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.                                                   (1261)

நிறுத்தலளவை பற்றிய குறிப்பும் குறளிலே இடம்பெறக் காண்கிறோம். தராசு ஒரு நிறுத்தலளவைக் கருவி. இருதட்டுகள் கொண்ட இக்கருவியில் உள்ள சமன்கோல், தட்டுகளிலுள்ள பொருள்களின் எடையைச் சீர்தூக்கிச் சமன்படுத்துகிறது. அந்தச் சமன்கோல் போன்றதே சான்றோரின் செய்கையும். இருபக்கமும் உள்ள நிலையை ஆராய்ந்து ஒரு பக்கம் சாராமல் நடுவுநிலையையோடு சான்றோர் செயல்படுவர்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
        கோடாமை சான்றோர்க்கு அணி.                                         (118)

துன்பமும் ஒரு வகையில் நன்மை பயப்பதே; ஏனெனில் அதுவே உறவினர் மற்றும் நண்பரின் உண்மையான அன்பை அளக்க உதவும் அளவுகோல் என்ற சிந்தனையைக் கூறுமிடத்து நீட்டி அளப்பதோர் கோல்என்ற சொற்றொடரால் நீட்டலளவையைக் குறிக்கிறார்.

கேட்டினும் உண்டுஓர்  உறுதி கிளைஞரை
        நீட்டி அளப்பதோர் கோல்.                                                         (796)

அளக்கும் கோலிற்கு நுண்ணியம்என்ற சொல்லைப் பயன்படுத்துவதோடு, ஒருவரது கண்ணைப் பார்த்தே அவரை அளக்கலாம் என்ற கருத்தும் வெளிப்படுகிறது.

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
        கண்அல்லது இல்லை பிற.                                                     (710)

விலங்கியல் சிந்தனைகள்

விலங்குகளை வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என இரண்டாகப் பிரிப்பார். அறிவியல் கருத்துக்களை வெளிப்படுத்த முனைந்த வள்ளுவர், அந்த உணர்வுகளைத் தாம் அறிந்த விலங்குகளின் இயல்புகளோடு ஒப்புவமை காட்டி விளக்குகிறார். அவ்வகையில் யானை, புலி, முதலை, நரி, ஆமை, மான் ஆகிய காட்டு விலங்குகளின் இயல்புகளை, விலங்கியலார் போன்று நன்கு ஆராய்ந்து, அப்பண்புகளை ஒப்பிட்டுக்காட்டிக் கூறவந்த கருத்துகளைத் தெளிவுபடுத்துகிறார்.

செயலாட்சிக்கு மிகவும் அடிப்படையானது ஊக்கம். ஊக்கம் இருந்தால் எத்துணை வலிய அருஞ்செயலையும் செய்துமுடிக்க முடியும். ஊக்கம் உடைய விலங்கு புலி. ஆனால் உருவத்தில் யானையை விடவும் சிறியது. ஆனால் கூரிய தந்தத்தையும் பெரிய உருவத்தையும் உடைய யானை புலிக்கு அஞ்சுகிறது. அதுபோல ஊக்கம் இல்லாதோர் ஊக்கம் உடையோரைக் கண்டு அஞ்சுவர் என்ற குறிப்பு வெளிப்படுகிறது.

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
        வெரூஉம் புலிதாக் குறின்.                                                     (599)

அவரவர் சூழலில் அவரவர் வலியர் என்பதைக் கூறவந்த வள்ளுவருக்கு முதலையின் இயல்பு நினைவிற்கு வருகிறது. முதலையின் வலிமை ஆழமான நீரிலே வெளிப்படும். அவ்வலிமையினால் தன்னை எதிர்க்கும் பிற உயிரினங்களை வெல்லும். வலிமையுடைய அதே முதலை நீரிலிருந்து வெளியே வந்தால் வலிமையிழந்து பிறவற்றை வெல்லமுடியாது போகும். மேலும் நிலைத்து நிற்காமல் ஓடும் நீரிலே முதலைக்குப் பகையானவை நின்று எதிர்க்க முடியாது; அந்தப் பகை உயிர்கள் இயங்குவதற்குரிய நிலத்திலே முதலை இயங்க முடியாது. எனவே அவரவர் சூழலில் அவரவர் வலிமை மேம்படும்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
        நீங்கின் அதனைப் பிற.                                                             (495)

நீர், நிலம் என்று இடத்திற்கு ஏற்ப ஒரு விலங்கினுடைய வலிமை அமைவது போல பொழுதிற்கேற்பவும் உயிரினங்களின் வலிமை மாறுபடும். காகம், கூகை இரண்டினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கூகை வலிமையுடையது. ஆனால் கூகைக்குப் பகலிலே கண்பார்வை இருக்காது. அந்த நேரத்திலே காக்கையால் கூகையை வெல்லமுடியும்.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை கல்வெல்லும்
        வேந்தர்க்கு வேண்டும் பொழுது.                                          (481)

நரி தந்திரமுடைய விலங்கு. யானையோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது. உருவமும் வலிமையும் மிகமிகக் குறைந்தது. அதே சமயம் யானை சேற்றிலே சிக்கிவிட்டால் நரியின் கை ஓங்கிவிடும் ;  யானையை எளிதில் வென்றுவிடும். எனவே வலிமை குறைந்தவர்கள் கூட இடமறிந்து சூழலறிந்து செயலாற்றினால் வெற்றி பெறமுடியும் என்று காட்டுகிறது குறள்.

கால்ஆழ் களரின் நரிடும் கண்ஞ்சா
        வேல்ஆள் முகத்த களிறு.                                                      (500)

தன்னுடைய உடம்பை ஓட்டிற்குள்ளே அடக்கி வாழக்கூடிய ஆமையை ஐம்புலன்களை அடக்கி வாழும் பெரியாரோடு நினைத்துப் பார்க்கிறார் வள்ளுவர்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
        எழுமையும் ஏமாப்பு உடைத்து.                                            (126)

தன்மானத்தைப் பற்றிக் கூறவந்த வள்ளுவருக்குக் கவரிமானின் இயல்பு நினைவிற்கு வருகிறது. தன்னுடைய உடம்பினை மயிர் உதிர்ந்தால் உயிர்வாழ முடியாத விலங்கினம் கவரிமான். அதுபோல இழுக்கு ஏற்படின் உயிர்நீப்பர் பெரியோர்.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
        உயிர்நீப்பர் மானம் வரின்.                                                        (969)

படைவீரனுடைய வலிமையைப் பற்றிக் கூறுமிடத்து வீரமில்லாப் பலர் திரண்டு வந்தாலும் வீரமுடைய ஒருவனுக்கு முன்னால் அவர்கள் புறங்காட்டி ஓடுவர் என்பதைக் கீழ்க்காணும் குறள் விளக்குகிறது.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
        நாகம் உயிர்ப்பக் கெடும்.                                                         (763)

எலிகள் பல ஒன்று கூடித் தங்களுக்குப் பகையான நாகத்தைத் தாக்க வந்தால், நாகம் எதிர்நின்று சீறும் அளவிலேயே அவை சிதறிவிடும். எலிக்குப் பகை நாகம் என்ற உண்மையை இப்பாடல் வெளிப்படுத்துகின்றது.

காலமறிந்து செயலாற்ற வேண்டும். அப்போதுதான் நினைத்த காரியம் ஈடேறும். ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்குபோல, காலத்தால் அறிந்து இடத்தால் செயலாற்ற வேண்டும் என்பதற்குக் கொக்கு ஒக்க என்றார். செயலாற்றுவதற்கு உரிய காலம் வாய்க்காதபோது கொக்கு போல் காத்திருக்க வேண்டும். உரிய காலத்தில் அது மீனைக்கொத்துவது போலச் (குத்து ஒக்க) செயலாற்ற வேண்டும்.

கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
        குத்துஒக்க சீர்த்த இடத்து.                                                      (490)

நிலையாமையைப் பற்றிக் கூற வந்த வள்ளுவர் உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை எண்ணிப்பார்க்கிறார். புள் உயிருக்கும், குடம்பை உடலுக்கும் உவமையாகக் காட்டப்படுகின்றன. முட்டை அதாவது முட்டையோட்டிற்குள்ளிருந்து வெளிவரக் கூடிய உயிரினம் பறவை மட்டுமன்று, கோழி, மீன், பாம்பு ஆகியவையும் அத்தன்மைத்தே என்றாலும் பறக்கக்கூடிய உயிரினம் புள்ளினமே. உடலிலிருந்து உயிர் பறந்து செல்வதாகக் கருதப்படுவதால் முட்டை (உடல்) யிலிருந்து வெளிவந்து பறவையைக் (உயிரை) குறள் சுட்டிக்காட்டுகிறது.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
        உடம்போடு உயிரிடை நட்பு.                                                  (338)

உயிரினங்களை வேட்டையாடி உண்ணுதல் காரணமாக அவ்விலங்குகளின் இனம் பூண்டற்றுபோகும் நிலையைப் பின்வரும் குறள் காட்டுகிறது.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
        அண்ணாத்தல் செய்யாது அளறு.                                        (255)

இதற்கு உரை எழுதிய பரிமேலழகர்உண்ணப்படும் விலங்குகள்அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் விடுதலின் உண்ணாமை உள்ளது உயிர்நிலை என்று கூறுவர்.

தாவரவியல் சிந்தனைகள்

பலவகை மரங்களைப் பற்றிய குறிப்புகள் குறளில் இடம்பெறக் காண்கிறோம். பயன்மரம் (216), மருந்து மரம் (217), பனைமரம் (104), வற்றல் மரம் (78), முள் மரம் (879) ஆகிய மரங்களின் பெயர்களிடமிருந்தே அவற்றின் தன்மையும் பெறப்படுகிறது. கிளைவிட்டுப் பரவும் இயல்பினையுடைய மரத்தைப் பற்றிய குறிப்பும் காட்டப்படுகிறது. கோடு அதாவது கொம்பு கொண்டு மேலேறும் மரத்தினது வளர்ச்சி பெறப்படுகின்றது.

கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக்
        கோடுகொடு ஏறும்என் நெஞ்சு.                                             (1264)

மலர்களைப் பற்றிய செய்திகளும் இடம் பெறுகின்றன. மென்மைக்கு எடுத்துக்காட்டாக அனிச்ச மலரைப் பல பாடல்களிலே (1120, 1115, 90) தருகிறார் வள்ளுவர்.

ஒரு மலரின் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப அரும்பு, போது, மலர், முகை, மொக்கு என்ற கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காலை அரும்பிப் பகல்லெல்லாம் போதாகி
        மாலை மலரும்இந் நோய்.                                                      (1227)

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
        நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு.                           (1274)

குறள் தரும் கருக்காய், காழில்கனி ஆகிய கலைச்சொற்களை இக்காலத் தாவரவியல் கருத்துக்களைச் சொல்லப்பயன்படுத்தலாம். கருக்காய் என்பது பழுக்காத காய்; பிஞ்சுக்காய்.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
        கனியும் கருக்காயும் அற்று.                                                                 (1306)

இன்று விதையிலாப் பழங்கள் நன்கு அறிமுகமாக விட்ட பழங்கள். இந்த விதையிலாப் பழங்களையே காழில் கனி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

தாம்வீழ்வார்  தம்வீழப் பெற்றவர்  பெற்றாரே
        காமத்துக் காழில் கனி.                                                             (1191)

               தமிழருக்கு நன்கு கைவரப்பெற்ற தொழில் வேளாண்மைத் தொழில், எனவே வேளாண்மைக் கருத்துக்கள் அவன் கண்டு கேட்டு உற்று உணர்ந்தவை. அவனுக்கு அறநெறிக் கருத்துக்களைக் கூறப்புகுந்த வள்ளுவர், அவனுடைய வாழ்க்கையோடு தொடர்புடைய வேளாண்மைக் கருத்துகளோடு ஒப்பிட்டுக் காட்டும் உத்தியை மிகுதியாக பயன்படுத்துகிறார்.

கொடியவரை இனம் கண்டு வீழ்த்த வேண்டும்; நல்லோரை வாழவைக்க வேண்டும் என்று கூறும்போது களையெடுப்பதன் மூலம் பயிரை வாழ வைக்கும் உழவுப் பணி வெளிப்படுகிறது.

கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
        களைகட் டதனொடு நேர்.                                                         (550)

பயிர் நன்கு முளைவிட வேண்டுமானால் நிலம் தக்கதாக இருக்க வேண்டும். குலத்தின் இயல்பை அக்குலத்தில் பிறந்தவர் சொல் காட்டும் என்பதை விளக்கும் குறள் இது.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
        குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.                                        (959)

வேளாண்மைக்கு அடிப்படை உழுதல். நிலத்தை எந்த அளவுக்கு உழவேண்டும். குறள் விளக்குகிறது. ஒரு நிலத்தை உழுபவன் ஒரு பலம் புழுதி கால் பலம் புழுதியாக ஆகும் வரையிலும் அதாவது அப்புழுதியிலுள்ள நீர் உலரும் வரையிலும் உழவேண்டும். கதிரவ ஒளியின் சக்தி நலத்தோடு இணையவேண்டும். அப்போது அந்த மண்ணிலே பயிர் வளர்வதற்கு, ஒரு பிடி எரு கூடப் போடத் தேவையில்லாது போகும்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்
        வேண்டாது சாலப் படும்.                                                          (1037)

வேளாண்மைக்கு முக்கியம் உழுதல் அதற்குப் பிறகு எருவிடுதல்; மூன்றாவதாகக் களையெடுக்க வேண்டும். நான்காவது, நீர்பாசனத்திற்காக நீர்கால் யாத்தல் வேண்டும். இத்தனையும் செய்து முடித்தால் பயிர் நன்கு வளர்த்து விடும். வளரும் பயிரைப் புழு பூச்சிகளிடமிருந்து காத்தல் ஐந்தாவது செயல். இந்த ஐந்து செயல் முறைகளையும் உள்ளடக்கியதே இன்றைய வேளாண்மை அறிவியல். பூச்சி, புழு போன்றவற்றிலிருந்து பயிரைக் காப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் காத்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

ஏரினும் நன்றால் எருஇடுதல் ட்டபின்
        நீரினும் நன்றுஅதன்  காப்பு.                                                    (1038)

மருத்துவ இயல் சிந்தனைகள்.

மருந்துஎன்ற அதிகாரத்திலே இடம்பெறும் குறட்பாக்கள் வள்ளுவரின் தெளிவான மருத்துவ அறிவைச் சுட்டுகின்றன. ஆயுர்வேத மருந்துகள் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் நோய் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களாகக் கூறும். குறள் கூறுவது உணவுப் பழக்கவழக்கங்களேயாகும். உணவுப் பொருள்களின் ஒவ்வாமையாலும், அளவுக்கு மீறி உண்பதாலும், குறைவாக உண்பதாலும் பிணிகள் தோன்றுகின்றன. நன்கு பசித்து உண்ண வேண்டும் என்பது இன்றைய மருத்துவம் சொல்லும் அறிவுரை. அனுபவபூர்வமான அறிவின்பாற்பட்ட அறிவுரை இக்குறளிலே வெளிப்படுகிறது. உணவு உண்ணத் துவங்கும் போது பசியின் காரணமாக முதலிலே உண்ணப்பட்ட உணவின் சுவை அதிகமுடையதாக இருக்கும். பிறகு உண்ணும் கவளங்கள் அந்த அளவுக்குச் சுவையை வெளிப்படுத்தா என்று கூறும் குறள் வருமாறு.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
        புணர்தலின் ஊடல் இனிது.                                                     (1326)

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
        துய்க்க துவரப் பசித்து.                                                              (944)

அற்றது அறிந்துஎன்பதற்குப் பரிமேலழகர் உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான் அதுவும் அறல் வேண்டும் என்பார்மிகப் பசித்துஎன்றார். உண்பான் பகுதியோடு மாறு கொள்ளாமையும், கால இயல்போடு மாறு கொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம் என்பார். பகுதியோடு மாறு கொள்ளாமை என்பது வாதம், பித்தம், கபம் ஆகியவற்றைக் கருதுதல், கால இயல்பு என்பது உணவு உட்கொள்ளும் பொழுது பற்றிய நிலை, தேன், நெய் போன்றவை வீரியமுடையவை. எனவே சுவை நோக்கிலும் வீரியம் நோக்கிலும் கருதி உண்ணும் நிலை. உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்துக் குறைவினால் நோய் பீடிக்கும். அது போலவே அதிகமாக உண்டாலும் நோய் ஏற்படும் இதனையே

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
        வளிமுதலா எண்ணிய முன்று.                                            (941)

என்ற குறள் காட்டப்படுகிறது. அளவிறந்து உண்பவனை கழிபேர் இரையான் என்ற சொல்லால் சுட்டுகிறார் வள்ளுவர். இதனால் ஏற்படும் நோயை மிகை ஊண்’ (Hypertrophy) என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே செரிமான அளவறிந்து உண்ணவேண்டும். அளவறிந்து உண்க என்று குறள் அறிவுறுத்துகிறது.

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
        பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.                                        (943)

உடலுக்கு ஒவ்வா உணவை உட்கொள்ளுவதாலும் நோய்கள் உண்டாகின்றன. தான் முன்னர் உண்ட உணவுப் பொருள்களின் இயல்பை, அறிகுறிகளால் தெளிய அறிந்து அதற்கேற்ப உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு, ஒவ்வாதனவற்றை விலக்கி வாழ்ந்தால் மருந்து என்ற ஒன்றை நாட வேண்டிய தேவையே ஏற்படாது.

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
        அற்றது போற்றி உணின்.                                                        (942)

மருத்துவத் தொழிலின் செயல்முறைகளில் குறுகத்தறித்துக் கூறியுள்ள குறள் வருமாறு

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.                                                   (948)

 

நோய்களின் அறிகுறிகளை இன்னது என்று துணிந்து கொள்வது மருத்துவத்தின் முதல்படி. இதனை ஆங்கிலத்தில் (Diagnosis)   என்பர். நோய் ஏற்படுவதற்கான காரணங்களை அறிவது மற்றொரு நிலை. இதனை நோய்க்குறியல்   (Pathology)  என்று ஆங்கில மருத்துவர் கூறுவர். அந்நோய் தீர்க்கும் வழி முறைகளை அறிந்து கொள்வது மூன்றாவது நிலை. சிகிச்சையை முறையோடு பிழையின்றிச் செய்ய வேண்டுவது நான்காவது நிலை. அவ்வாறு சிகிச்சை செய்யும்போது, நோயாளியின் வயது, நோயின் கால அளவோடு நோயின் வீரியம் ஆகியவற்றை மனதில் கொண்டு மருத்துவர் செயல்படவேண்டும். நோயாளி, சிறுவராக இளைஞராக, முதுமையடைந்தனராக இருப்பதையொட்டி சிகிச்சைமுறை மாறும். சில நோய்கள் முற்றியனவாக இருக்கும்; சில தொடக்க நிலையில் இருக்கும். நோயின் வீரியத்திற்கு ஏற்றாற் போலவும் கால அளவிற்கு ஏற்றாற்போலவும் சிகிச்சையின் கால அளவும் மருந்தின் வீரியமும் மாறுபடும். இவற்றை நன்கு ஆராய்நது பிறகு, நூலறிவாலும் பட்டறிவாலும் சிகிச்சை செய்க என்று அறிவுறுத்துகிறது குறள்.

உற்றான் அளவும் பிணிளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.                                                          (949)

நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது நேரடித் தொடர்புடைய  நான்கினைச் சுட்டுவார் வள்ளுவர்.

1.             நோயாளி (நோய் உற்றவன்)

2.             நோயைத் தீர்க்கும் மருத்துவன் ( தீர்ப்பான்)

3.             மருத்துவனுக்கு தேவையான மருந்து (மருந்து)

4.             நோயாளியை கவனித்துக் கொள்கும் செவிலி (உழைச்செல்வான்)

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று

அப்பால்நாற் கூற்றே மருந்து.                                               (950)

 

இக்குறளுக்கு பரிமேலழகர் தரும் விளக்கம் மருத்துவத்துறை அறிவினை வெளிப்படுத்துகிறது. நோயாளியைப் பொறுத்தவரை சிகிச்சைக்குத் தேவைப்படும் பொருளுடையவனாக அவன் இருத்தல் வேண்டும். மருத்துவர் அறிவுரைக்கு ஏற்ப நடக்க வேண்டும், தன்நோயின் தன்மையை உணர்த்த வல்லவனாக இருத்தல் வேண்டும். மருத்துவம் செய்யும்போது ஏற்படும் உடல் வலிமையைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

அதுபோல மருத்துவரோ எனில், நோய் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். மருத்துவ நூலறிவுடன் நுண்ணறிவும் உடையவனாக இருத்தல் வேண்டும். மருந்து எனும்போது. நோய்க்கு ஏற்ற மருந்துகளை வீரியம் விளைவாற்றல்களால் மேம்படுதல், ஆகிய குணங்கள் இருக்க வேண்டும். அம்மருந்து எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

உழைச்செல்வானாகிய செவிலியருக்கு, நோயாளியிடம் பிரிவுகாட்டும் தன்மை வேண்டும். உள்ளத்தால் தூயவனாக இருத்தல் வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி பிழைபடாது செய்யும் திறமை வேண்டும். மேற்குறிப்பிட்ட நான்கும் நன்கமைந்தால் பிணி நீங்கிவிடும்.

நோய்க்கு உணவுப் பழக்கம் காரணமாவது போலே தீச்செயலும் காரணமாகிறது. கள்ளுண்ணாமை என்ற அதிகாரம் இதற்குச் சான்று. அது போன்றேதான் ஒழுக்கமும். வரைவின் மகளிர் என்ற அதிகாரத்திலே பரத்தமை ஒழுக்கத்தைக் கண்டிக்கிறார். ஒழுக்கக் குறைவினால் பெருகிவரும் எய்ட்ஸ் நோய் இன்று உலகையே ஆட்டிவைக்கும் ஒரு நோய். வள்ளுவர் உணவுப் பழக்கவழக்கங்களினாலும், கள் போன்ற போதைப் பொருள்களை ஒழிப்பதாலும் ஒழுக்கக்கட்டுப்பாட்டுடன் இருப்பதாலும் நோய்களிலிருந்து தப்பலாம் என்பதை குறட்பாக்களின் மூலம் வலியுறுத்துகிறார்.

வள்ளுவரின் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய தத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கக் காணலாம். இக்குறட்பாக்களை மேலும் நுணுகி ஆராய்ந்தால், உளவியல்,மரபணுவியல், வணிகவியல், பொருளியல் முதலான பல்வேறு துறைக் கருத்துக்களின் அடிப்படைத் தத்துவங்களைக் கண்டறிந்து பயன் பெறலாம்.


1 கருத்து:

Unknown சொன்னது…

நிறைந்த அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய என் நெறியாளரிடம் இளங்கலை,முதுகலை மாணவனாக அமர்ந்து இலக்கியப்பாடங்களைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் (ஆய்வு மாணவராக நான் இருந்ததால்) எனக்கு இருந்தது;இவ்வலைத்தளம் வாயிலாக 20 வருடங்களுக்குப்பின்பு என் எண்ணத்தை நிறைவேற்றியிருக்கிறார் எனது 'குரு'முனைவர் இராதா செல்லப்பன் அவர்கள்!மகான் திருவள்ளுவர் பதினெண்சித்தர் போல மருத்துவம்,ஆரோக்கியம் தொடர்பாகவும் கூறியுள்ளார் என்பதை அறியமுடிகிறது. தங்களைப்போல அவரும் அறிவியல் தமிழில் ...இல்லை...மகான் திருவள்ளுவரைப்போல தாங்களும் அறிவியல் தமிழில் வல்லவர்..பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அறிவியலில் நுணுக்கமான அறிவைப்பெற்றிருந்தனர் என்பதை தாங்கள்அற்புதமாகக் கூறியுள்ளீர்கள்!வலைத்தளத்தில் தங்கள் தமிழ் அலர் ஆகி மணம் பரப்பட்டும்!அன்புடன், முனைவர் சு. ஞானதீபன்,தமிழ்த்துறைத்தலைவர்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,குமாரபாளையம்-638183