இலக்கியம் (Literature)

 

ஒரு மெய்ப்பாடு அன்றும் இன்றும் -நற்றிணை காட்டும் மெய்ப்பாடு

       மெய்ப்பாடு என்றால் மெய் வழியாக அதாவது உடல் வழியாக வெளிப்படும் மன உணர்வுகள். மனதிற்குப் பிடிக்காத ஒன்றை எண்ணும்போது முகத்தைச் சுளித்தல், மனமகிழ்ச்சியென்றால் கண்கள் ஒளி வீசுதல், கோபம் என்றால் அதே கண்கள் அனலை உமிழ்தல் முதலான வெளிப்பாடுகள் முகத்தில் மட்டுமன்றி மெய் முழுவதும் பிரதிபலிப்பதைத் தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் என்று தனியொரு இயலாகக் தருகிறது. நற்றிணையில் ஒரு காட்சி. தலைவி கூற்றாக அமைகிறது. பாடியவர் உலோச்சனார். தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள். அம்பலில் தொடங்கிய (அதாவது அரசல் புரசலாக இருந்த) இவர்தம் பழக்கம் அலராக மாறுகிறது. அந்தக்காட்சியை அழகாக நம் கண்முன்னே கொண்டு வருகிறார் புலவர். அக்கம் பக்கத்திலுள்ளோர் சிலர் ஒருவருக்கொருவர் கடைக்கண்ணால் கண்ஜாடை காட்டுகின்றனர். சுட்டு விரலை மூக்கின் உச்சியில் வைத்து மெய்ப்பாடு காட்டுகின்றனர். இங்கே வெளிப்படையாகப் பேசவில்லை எனினும் அந்த சங்க இலக்கியத் தலைவியை, அதாவது உயர்குடிப்பெண்ணைப் பற்றி வெளிப்படையாகப் பொதுவிடத்தில் பேசத் தயங்கித்தான் இந்த மெய்ப்பாடு. கண்களும் பேசுகின்றன. இந்தப்பெண்ணா? இப்படியா? நினைக்கவேயில்லை என்ற எண்ணக் கூறுகளைப் புலவர் இரண்டே வரிகளில் காட்டுகிறார். இன்றும் நம்மிடையே இந்த மெய்ப்பாடு உண்டு. ஒருவருக்கொருவர் கண்ணால் ஜாடை காட்டுவதும் சுட்டு விரலை மூக்கின் உச்சியில் வைத்து பெருவிரலை மேவாயின் அடிப்புறத்தில் வைத்து மற்ற மூன்று விரல்களும் பக்கவாட்டில் விரியக் காட்டும் ஒரு மெய்ப்பாடு இது.

சிலரும் பலரும் கடைக்க ணோக்கி

மூக்கி னுச்சி சுட்டுவிரல் சேர்த்தி

மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச்

சிறுகோல் வலந்தன ளன்னை யலைப்ப

வலந்தனென் வாழி தோழி கானற்

புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சவற்

கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ

நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனோடு

செலவயர்ந் திசினால் யானே

யலர்சுமந் தொழிகவிவ் வழுங்கலூரே                                 (நற்றிணை-149

அனைவரும் எளிதில் பொருளறியும் வண்ணம் இப்பாடல் பதம் பிரித்தும் இங்கே தரப்பட்டுள்ளது.

 சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி

மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்

சிறுகோல் வலந்தனள் என்னை அலைப்ப

வலந்தனன் வாழி தோழி கானல்

புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச் சவல்

கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ

நடுநாள் வரூஉமிய தேர்க் கொண்கனோடு

செலவு அயர்ந்திசினால் யானே

அலர் சுமந்தொழிக இவ் அழுங்கலூரே     

(அம்பல்-பழிச்சொல், மறுகில்-அக்கம்பக்கத்தில், வலந்தனள்-சுழற்றினள், குரூஉ-நல்ல நிறம், சவல்-பிடரி மயிர், கொண்கன்-தலைவன்)

இவ்வாறாக முதலில் அரும்பாக இருந்த அம்பல், அதாவது ஒரு சிலருக்கு மட்டுமே அரசல் புரசலாகத் தெரிந்திருந்த களவொழுக்கம் அக்கம்பக்கத்தோரின் மெய்ப்பாடு மூலம் வெளிப்பட்டது. தலைவி தன் தோழியிடம் பின்வருமாறு கூறுகிறாள். “அம்பலை அறிந்த தாய் ஒரு கம்பை எடுத்துத் என்னைச் சுழற்றிச் சுழற்றி அடித்தாள். நானும் சுருண்டு வீழ்ந்தேன். கடற்கரையில் புதுமலரின் மணம் வீசும் நல்ல நிறமுடைய பிடரியுடைய புரவி பூட்டிய தேர் ஓட்டி நள் யாமத்தில் வருகின்ற என் தலைவனோடு நான் செல்லவிருக்கிறேன். அப்போது அரும்பாக இருக்கும் ஊரார் பழிச்சொல் உண்மையாகி அதுவே அலராக மாறும். அதாவது பலரும் எங்கள் களவொழுக்கத்தை அறிவர். அறிந்து அலர் பேசி இந்த ஊர் பாழாகப் போகட்டும்” என்கிறாள் தலைவி. தலைவனோடு தலைவி யாருமறியாமல் சென்றுவிடுவது உடன்போக்கு. இந்த மெய்ப்பாடு இரண்டு நிலைகளில் பொருள் தருகிறது. முதலில் தலைவன் தலைவி களவொழுக்கம் பற்றியது. இது அம்பல் நிலை. பிறகு பெருங்குடிப்பெண் காமவயப்பட்டு இப்படி உடன்போயினளே என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் மெய்ப்பாடு மூலம் கருத்தைப் பரிமாறிக்கொண்டனர் எனலாம்.    

         

                        அம்பலும் அலரும்

        சங்க இலக்கியத்தில் தலைவன்-தலைவியினுடைய களவொழுக்க நிலையில் அம்பலும் அலரும் என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. களவொழுக்கம் என்பது தலைவனும் தலைவியும் (இன்றையத் தமிழில் காதலனும் காதலியும்) காதல் வயப்பட்டு பிறரறியாமல் சோலையில் சுனையருகில் எனப்  பல இடங்களில் சந்திக்கிறார்கள். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவதுபோல அவர்கள் சந்திப்பதை ஒரு சிலர் பார்த்துவிடுகின்றனர். அதைப்பற்றி அவர்கள் ஜாடை மாடையாகப் பேசத் தலைப்படுகின்றனர். இன்றும்கூட அந்தச் சூழல் நமக்குப் புதிதன்று. அது கிராமமானாலும் சரி பட்டினமானாலும் சரி இவ்வாறு ஜாடை மாடையாகப் பேசும் சூழல் அதிகமாக ஏற்படுவது காதல் வயப்பட்டோரைப் பற்றியதாகத்தான் இருக்க முடியும். சங்க இலக்கியத்தில் அதற்கென இரு சொற்களைப் பயன்படுத்தி அவற்றிற்கிடையே பொருள் வேறுபாட்டைக் கொண்டுவந்த நயம் நம்மை மகிழ்விக்கிறது. அம்பலும் அலரும். அம்பல் என்பது அரும்பல் என்பதன் சுருக்கம். அலர் என்பது மலர் மணர்ந்து மணம் வீசுவதைக் குறிக்கும். மிக மென்மையான உணர்வு காதல். அந்தக் காதலை மலரின் மணத்தோடு இணைத்துக் காட்டுகின்றனர் புலவர்கள். மலர் என்பது மலர்வதற்குமுன் அரும்பாக இருக்கும்போது அதன் மணம் மிகவும் கொஞ்சமாகத்தான் இருக்கும். அதுவே மலரும்போது அதன் மணம் வெகுதூரம் வீசும். மணத்தின் வீச்சு அரும்பை விட மலரில் அதிகம். மலர் அரும்பல் நிலை போல் தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டதை சிறிய அளவில் அல்லது ஒரு சிலரே பேசும் நிலையில் அது அம்பல். அதே நிலை வளர்ந்து பலரும் அது குறித்துப் பேசினால் அது அலர்.        

        

  


குறுந்தொகைப் பாடலில் உள்ளுறைப் பொருள்

       சங்க இலக்கியங்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை திரு.சௌரிப்பெருமாள் அரங்கனார் அவர்களால் முதலில் உரையுடன் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது. பிறகு பல பதிப்புகளையும் உரைகளையும் கண்டது குறுந்தொகை. படிக்கப் படிக்கத் தெவிட்டாததாக இருப்பது மட்டுமன்றி ஒவ்வொரு முறை படிக்கும் போதும் பலவகையான உணர்வுகளையும் தருவது சங்க இலக்கியம்.  அவ்வகையிலே குறுந்தொகைப் பாடல்களைப் படிக்கும்போது சில புதிய விளக்கங்கள் தோன்றின.

       குறுந்தொகை முதலாவது பாடல் செங்களம் பட என்று தொடங்கும் பாடல். 

       செங்களம் படக்கொன் வுணர்த் தேய்த்த  

       செங்கோ லம்பின் செங்கோட்டு யானைக்

       கழல்தொடிச் சேஎய் குன்றம்

       குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

 

இது திப்புத் தோளார் எழுதிய பாடல். குறிஞ்சித் திணைப் பாடல். தலைவன் தலைவியைக் காண மலரோடு வருகிறான். தலைவிக்கு அளிக்கவென அவன் கொண்டு வந்த பரிசுப்பொருள் (கையுறை) செங்காந்தள் மலர். தலைவிக்காகக் கொண்டு வந்த அந்த மலரைத் தோழியிடம் கொடுத்துத் தலைவியிடம் அதைச் சேர்க்கச் சொல்வது அவன் நோக்கம். தோழி அவனிடம் சொல்கிறாள். தலைவி வாழும் முருகப்பெருமானுக்குரிய இம்மலை குருதியின் நிறம் வாய்ந்த செங்காந்தள் பூங்கொத்துக்களை உடைய மலை. எனவே “காந்தட்பூ நிறைய உடையேமாதலின் நின் கையுறையாம் காந்தட் பூவினை ஏற்றுக் கொள்ளோம்“ என்பது இப்பாடலின் கருத்து. இதனைக் கூறி அவன் கொண்டுவந்த கையுறையை மறுக்கிறாள் தோழி. இங்கே தலைவன் கொண்டுவந்த கையுறையை மறுப்பதன் மூலம் தலைவியை சந்திக்கும் வாய்ப்பை அவனுக்குத் தர மறுக்கிறாள் தோழி. இந்தப் பாடலில் போர்க்களம் ரத்தக்களரியாகச் செங்களமாக உள்ளது குறிப்பிடப்படுகிறது. அம்பின் நுனியில் இரத்தம் தோய்ந்திருப்பதால் அந்த அம்பு செங்கோல் அம்பு எனப்படுகிறது. அது போன்றே பகைவர்களைத் தனது தந்தத்தால் குத்திக்கொன்ற யானையின் கோடு குருதி தோய்ந்து செந்நிறமாக உள்ளது. குன்றத்துக் குமரனோ செவ்வேள். கரிய நிறமுடையனல்லன். செந்நிறமுடையன். இந்த மலையோ குருதிப்பூவாகிய செங்காந்தள் பூவினை நிரம்ப உடையது. இந்தப் பாடலின் வருணைகள் எல்லாமே சிவந்த நிறத்தைக் குறிப்பனவாக உள்ளதைக் காண முடிகிறது. இப்பாடலின் மூலம் தலைவியைக் காண விழையும் தலைவனின் நோக்கம் மறுக்கப்படுகிறது. இப்பாடலின் புற அமைப்பினைப் பார்த்தால் அவன் கொண்டுவந்த கையுறை மிக எளிதாக அம்மலையிலே கிடைக்கக் கூடிய ஒன்று. எனவே அந்தக் கையுறை பெரிய எதிர்பார்ப்பினைத் தலைவியிடத்தே ஏற்படுத்தாது. எனவே நீ இப்போது தலைவியைச் சந்திக்க இயலாது என்று கூறி அவன் விருப்பத்தை மறுக்கிறாள் தோழி. ஆனால் இப்பாடலின் அக அமைப்பினைப் பார்த்தால் வேறொரு கருத்து புலப்படுவதைக் காணலாம். பாடலில் இடம் பெறும் சொற்கள் எல்லாம் செவ்வண்ணத்தைக் குறிக்கும் சொற்களாக அமைக்கப்பட்டுள்ளன. செங்களம், செங்கோல், சேய், குருதிப்பூ ஆகிய சொற்களெல்லாம் சிவப்பு வண்ணத்தைக் குறிப்பவையாக உள்ளன. இதன் மூலம் தலைவியைக் கூடவரும் தலைவனிடம் தலைவி தற்போது வீட்டிற்கு விலக்காகி இருக்கிறாள். அதாவது மாதவிடாய் காலத்தில் இருக்கிறாள். எனவே அவளை நீ தற்போது சந்திக்க இயலாது என்று தோழி  குறிப்பாக உணர்த்துகிறாள் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா?. வெளிப்படையாகச் சொல்ல இயலாதவற்றைச் சுற்றி வளைத்துச் சொல்வது, இலைமறை காயாகச் சொல்வது மரபுதானே. இவை அகப்பாடல்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இதில் கூற்று நிகழ்த்துவோர் கருப்பொருள் வருணனையின் மூலம் தாம் சொல்ல நினைத்ததைக் குறிப்பால் உணர்த்துவர். அதாவது கருப்பொருள் வருணனை மூலம் குறிப்பாக உணர்த்துவர். இது உள்ளுறையாகச் சொல்லுதலாகும். “செம்பாருளினும் குறிப்புப்பொருள்களே இன்பம் பயப்பன. இப்பாடலில் தோழி காந்தள் மலர், மலை, யானை முதலியவற்றைச் சுட்டிச் சொல்வது அதன்பொருளை உய்த்துணர வைக்கின்றது 

குறுந்தொகைப் பாடல் –புதியதொரு  கண்ணோட்டம்(Kurunthogai)


குறுந்தொகை 58-ஆவது பாடல் வருமாறு

இடிக்குங் கேளிர் நுங்குறை யா

நிறுக்க லாற்றினோ நன்றுமன் தில்ல

ஞாயிறு காயும் வெவ்றை மருங்கிற்

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் ரிதே

     இது வெள்ளிவீதியார் பாடல். குறிஞ்சித் திணைக்குரியது. பாங்கன் தலைவனை இடித்துரைக்க, அதற்கு பதிலளிக்கும் முறையில் தலைவன் கூற்றாக அமைந்த பாடல். தணிக்க முடியாத தன் காமநோயைப் பற்றித் தலைவன் பாங்கனிடம் கூறியதாக அமைந்த பாடல் இது. தான் முயன்றாலும் தணிக்க இயலாத நோயாக உள்ளது என்கிறான் தலைவன். தன் இயலாமையைக் கையில் ஊமன் ஒருவனின் இயலாமையை ஒத்ததாக அமைந்துள்ளது என்று கூறுகிறான் தலைவன். அதற்கு அவன் காட்டாகக் கூறுவது கையில் ஊமன் ஒருவனது நிலையை. ஞாயிறு காயும் நேரம். சூடான பாறையில் வைக்கப்பட்டுள்ள வெண்ணெய் உருகிப் பரவுவது போன்று தன் மனதிலே காமநோய் பரந்திருக்கிறது என்று தலைவன் கூறுவதாகப் பல உரையாசிரியர்களும் உரை எழுதியுள்ளனர். ஆனால் இப்பாடலைப் படித்தபோது சிறிது நெருடியது. இது குறிஞ்சிப்பாடல். குறிஞ்சி நிலத்திலே பாறை. அந்தப் பாறை மேலே வெண்ணெயைக் கொண்டு ஏன் வைக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. அப்போதுதான் வெண்ணெய் என்ற சொல் வெண்ணெல் என்று இருந்தால் பொருள் பொருத்தமாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. லகரம் என்பது தவறுதலாக யகரமாக ஏட்டைப் பிரதிசெய்தவர்கள் எழுதியிருக்கலாம் என்ற ஐயப்பாடும் தோன்றுகிறது. வெண்ணெய் என்பதற்குப் பாடபேதமாக வெண்ணெல் என்ற சொல்லைப் பெய்தால் வெண்ணெல் உணங்கல் என்ற சொல் கிடைக்கும். மலையிலே மூங்கிலரிசி கிடைக்கும். அந்த அரிசியைப் பாறையிலே காய வைத்திருக்கலாம். காய வைப்பதற்கு உணங்க வைத்தல் என்ற சொல் வழக்கும் உண்டு. சங்க இலக்கியத்தில் அந்தப் பொருளிலேயே பல இடங்களில் இச்சொல் பயின்று வந்துள்ளது. இன்றும் உணங்கல் என்ற சொல் வெய்யிலில் காய வைக்கப்பட்டது என்ற பொருளில் வழங்கப்படும் ஒரு சொல்லாகும். உணங்க வைக்கப்பட்டது உணங்கல், புழுங்கி  வேகவைக்கப்பட்டது புழுங்கல் என்ற சொற்கள் இன்றும் நாகர்கோவில் பக்கத்திலும் கேரள நாட்டிலும் வழக்கும் சொற்களாக உள்ளன. எனவே வெண்ணெய் என்பதற்குப் பதிலாக வெண்ணெல் என்று சொல் கொண்டால் பொருள் தெற்றென விளங்கி விடுகிறது. வெண்ணெல் உணங்கல் பாறையிலே கிடக்கிறது. அதனைப் பறவைகளோ பிறவோ தொடாமல் காப்பதற்கு வழியில்லாமல் கையில் ஊமன் பார்த்துக்கொண்டு இருக்கிறான். வாயால் ஒலியெழுப்பி அப் பறவைகளை சூ சூ என்று விரட்டவும் முடியாது. கையால் தட்டி ஒலியெழுப்பவோ விரட்டவோ முடியாது. அந்நிலையில் ஒன்றும் இயலாதவனாகக் கையறு நிலையில் ஒருவன் நிற்பதைப் போல தலைவனும் தன் காம நோயைத் தணிக்க இயலாமல் கையற்று நிற்கிறான் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இவ்வாறு வெண்ணெல் உணங்கல் என்று பாடபேதம் கொள்ளவேண்டுமானால் குறுந்தொகை ஏட்டுச் சுவடிகளை ஆய்ந்து தெளிய வேண்டும்.

                           ----------------------------

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

சங்க இலக்கியத்தில் வெளியில் சொல்ல இயலாதவற்றை மறைமுகமாக வெளியிடும் பாங்கு அற்புதம் அம்மா. இன்னும் ஏட்டுச்சுவடிகளை ஆராய வேண்டும். அதன் சரியான பொருளை ஆராய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன் அம்மா. நன்றி

Unknown சொன்னது…

நிறைந்த அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய எனது நெறியாளரான முனைவர் இராதா செல்லப்பன் அவர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே(ஆய்வு மாணவராக நான் இருந்ததால்) என்ற ஏக்கம் எனக்கு இருந்தது;இந்த வலைப்பதிவு வாயிலாக 20வருடங்கள் கழித்து இறைவன் என் எண்ணத்தை செயல்கூட வைத்திருக்கிறார்;அற்புதமான சங்க இலக்கியப்பாடங்களை தங்கள் பார்வையில் அறிய அரிய வாய்ப்பு எங்களுக்கு!இதன் மூலமாக தங்களது கருத்துகள் அலர் ஆகி மணம் பரப்பட்டும்!பணிக்காலத்தில் பரபரப்பான எங்கள் Madam இவ்வலைப்பதிவில் வருகிறார்..மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி உஷ்ஷ்!

Unknown சொன்னது…

இப்படிக்கு,ஞானதீபன்

Unknown சொன்னது…

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் !அன்புடன்,ஞானதீபன்,கவிதா,ராகவ் மற்றும் குடும்பத்தினர்