செவ்வாய், 28 ஜூலை, 2020

பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை

பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை(Prof.S.Vaiyapuri Pillai)




தோற்றம் : 13.10.1891 திருவோணத் திருநாள்
மறைவு : 17.2.1956


 பிறந்த ஊர்   தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த சிக்க                                              நரசையன் கிராமம், திருநெல்வேலி.   தற்போது அவர்                                 பிறந்து வளர்ந்த இந்த  இடத்திற்கு  அவர் நினைவாக                                  வையாபுரி நகர்   என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது

பெற்றோர்

                தந்தையார் திரு. சரவணப்பெருமாள் பிள்ளை. 

               தாயார் திருமதி. பாப்பம்மாள் என்கிற  பிரம்மநாயகி

        சரவணப்பெருமாள் பிள்ளை தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர். சிறந்த சிவ பக்தர். திருஞானசம்பந்தர்மேல் கொண்ட பக்தி ஈடுபாட்டால் தம் மகன் வையாபுரியை சம்பந்தன், பாலறாவாயர் (பாலையா) என்ற பெயர்களால் அழைத்தார்  

மனைவியார்       

          திருமதி சிவகாமியம்மாள். இவர் தம் தந்தையார் திரு.வேலாயுதம் பிள்ளை இராஜசுந்தரம் என்ற நாவலை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாய்வழிப்பாட்டனார்    

          திரு. வையாபுரிப்பிள்ளை, பிரபலமான  பொறியாளர். இவர்தம்   பெயர்தான் பேராசிரியருக்கு  இடப்பட்டுள்ளது.             


தந்தைவழிப் பாட்டனார்

பேராசிரியர் குடும்பம் பரம்பரையாகவே தமிழ்ப்புலமை மிக்க குடும்பம். சங்கரலிங்கம் பிள்ளை தாமிரபரணிப் புராணம் அல்லது பொருநைமாதாப் புராணம் என்ற கவிதை நூலை இயற்றியுள்ளார். பிற தோத்திர நூல்களையும் எழுதியுள்ளார் (இந்நூல்கள் தற்போது கிடைக்கவில்லை). திருநெல்வேலி வீரராகவபுரத்தில் கிராம முன்சீப்பாக வெகுகாலம் விளங்கியவர்கள். பக்திச் சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். 

பேராசிரியரின் உடன்பிறந்தோர் 
  • தமக்கையார் –தாயம்மாள் சுவர்ணவேலுப்பிள்ளை 
  • தம்பி-சங்கரலிங்கம் பிள்ளை- திருநெல்வேலியில் கிராம முன்சீப்பாகப் பணியாற்றியவர். 
  • தம்பி-நடராச பிள்ளை (நாகர்கோவில் எஸ்.எல்.வி உயர்நிலைப்பள்ளியில் (நாகர்கோவில் துலட்சுமிபாய்உயர்நிலைப்பள்ளி)  தலைமையாசிரியராகப் பணியாற்றியவர் 

பேராசிரியரின் வாரிசுகள் 

  • சரோஜினி அம்மையார்-வையாபுரிப்பிள்ளை வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலையும் (1957) தையல் கலை தொடர்பான இரு நூல்களையும் எழுதியுள்ளார் 
  • தங்கம்மாள்-என் தந்தையார் பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை என்ற நூலை (1991) எழுதியுள்ளார். மலையாளத்தில் கொட்டாரத்தில் சங்குண்ணி நாயர் எழுதிய ஐதிக மாலை (ஏறத்தாழ 1000 பக்கங்கள்) என்ற மலையாள நூலைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். அந்நூல் விரைவில் அச்சு வாகனமேறும். இக்கட்டுரையாசிரியர் டாக்டர் இராதா செல்லப்பனின் தாயார். 
  • மனோன்மணி அம்மாள் 
  • சரவணப்பெருமாள் என்கிற ராஜா- அண்ணாமலைப் பல்கலைக்கழக எந்திரப்பொறியியல் துறைப் பேராசிரியராக வாழ்ந்தவர் 
  •  வேலாயுதன் என்கிற துரை- மருத்துவத்துறையில் Fellow of the Royal College of Surgery, London வழங்கும் எஃப்.ஆர்.சி.எஸ் பட்டம் பெற்றவர் 
  • பத்மாவதி அம்மாள் 
  •  தினகரன்-ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தவர்

பேராசிரியரின் கல்வி 

கல்வித் தகுதி        பி.ஏ., பி.எல்

  • ஆரம்பக்கல்வி திண்ணைப்பள்ளிக் கூடம். 
  • 1905-பின்னர் செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, மெட்ரிகுலேஷன் படிப்பு 
  • 1906-மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, திருநெல்வேலி (எஃப்.ஏ) இன்டர்மீடியட் 
  • சென்னை கிறித்தவக் கல்லூரி, சென்னை, (பி.ஏ.பட்டப்படிப்பு-சரித்திரமும் பொருளாதாரமும் சிறப்புப் பாடங்கள்) 
  •  சென்னை சட்டக்கல்லூரி-(எ.ஃப்..எல்) 
  •  திருவனந்தபுரம் மகாராஜா சட்டக்கல்லூரி (பி.எல்) 

பிறமொழியறிவு 

ஆங்கிலம் , பிரெஞ்சு, செர்மன், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்தவர். 

பணி விவரங்கள் 

  • ·1914 முதல் 1922 வரை திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தில் 8 ஆண்டுகள் வழக்கறிஞர் 
  •  1923-1925 வரை நெல்லையில் வழக்கறிஞர் 
  • 1926-1936 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகராதிப் பதிப்பாசிரியர் 
  • 1936-1946 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் 
  • 1951-1954 வரை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்

வையாபுரிப்பிள்ளையின் பேராசிரியப் பெருமக்கள் 

  •  சென்னை கிறித்துவக்கல்லூரியில் ஆசிரியர் மறைமலையடிகளார் 
  • பாம்பன் தவத்திரு குமரகுருதாச சுவாமிகள் 
  • யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர் 
  • இந்துக்கல்லுரியில் ஆசிரியர் சிவராம பிள்ளை, ஆசிரியர் எம்.எஸ்.சுப்பிரமணியக் கவிராயர் 
  • தொடக்கப் பள்ளிக்கல்வியில் ஆசிரியர் கணபதிப்பிள்ளை 

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையிடம் ஆய்வு செய்த மாணவர்கள் 

  • பேரா. வ.அய்.சுப்பிரமணியம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மொழியியல் அறிஞர் 
  • ஏ.எஸ். நாராயணசாமி பி.ஓ.எல் Treatment of Nature in Sangam Polity 
  •  திருமதி. ஜீவா செல்லப்பா பி.ஏ The Manners and Customs of Ancient Tamils 
  • செல்வி.கே. ஞானாம்பாள் எம். ஏ. எம்.லிட் Domestic life in Ancient Tamizhakam
  •  ஜி. சுப்பிரமணிய பிள்ளை எம்ஏ பி.எல் A Study of Allusions in Sangam Literature (இவர் அண்ணாமலைப் பல்கலை்கழகத் துமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர்) 
  •  மு.அருணாசலம் எம்.ஏ Development of Popular Poetry in Tamil 
  •  ஏ.வி. மயில்வாகனன் பி.ஏ (ஆனர்ஸ்) இலங்கை Development of Prose in Tamil 
  • க.பொ.இரத்தினம் பி.ஓ,எல், பி.ஏ (இலங்கை) Development of Tamil Prosody 
  •  ஏ. கிருஷ்ணமூர்த்தி பி.ஓ.எல் A Study of Sangam vocabulary 
  • மு.சண்முகம் பிள்ளை Tolkappiyars influence on Tamil Language and Literature
  •  ஏ.ஆனந்தா பி.ஓ.எல் இலங்கை Life of the Ancient Tamils 
  •  எஸ். சேதுகாவலன் பி.ஓ.எல் இலங்கை Principles and History of Literary Criticism 

ஆய்வுலக நண்பர்களும் பெரியோர்களும் 

  •  திருவிதாங்கூரில் உயர்நீதி மன்ற நீதிபதியாக விளங்கிய கே.ஜி.சங்கர ஐயர் 
  • ஆர்.கே.சண்முகம் செட்டியார், சுவாமிநாத பிள்ளை (சட்டக் கல்லூரி நண்பர்கள்) 
  •  பள்ளிக்காலம் தொடங்கிய நட்பு உறவில் பெ.நா.அப்புசாமி ஐயர் 
  •  திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் உடன் பயின்ற க.அ.நீலகண்ட சாஸ்திரி (சரித்திரப் பேராசிரியர்) வே.சாரநாதன் (திருச்சி தேசியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர்) பி.ஸ்ரீ.ஆச்சாரியா (ஆராய்ச்சி வல்லுநர்) 
  •  திருவனந்தை வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் தொடர்பு ஏற்பட்ட பிற அறிஞர் பெருமக்கள் 
  •  கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை (அப்போது மகாராஜா பெண்கள் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர் 
  •  கெ.என்.சிவராஜ பிள்ளை (காவல் துறையில் பணியாற்றியவர் அதைவிட்டுப் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டவர் மலபார் குவார்ட்டர்லி ரெவியூ பத்திரிகையின் ஆசிரியர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்). பேரா.கெ.என்.சிவராஜ பிள்ளையர்கள் வையாபுரிப்பிள்ளையின் நெருங்கிய உறவினர். 
  •  கெ.என்.குமரேச பிள்ளை (கம்பராமாணச் சொற்பொழிவாளர், கெ.என்.சிவராஜ பிள்ளையிள் இளவல்) 
  • இசையரசு தி. இலக்குமண பிள்ளை 
  •  ஹரிஹர சாஸ்திரி(திருவிதாங்கூர் அரசாங்கத் தொன்னூல் நிலையத்தில் பணியாற்றியவர்) 
  •  பண்டித முத்துசாமிப் பிள்ளை (தமிழன் பத்திரிகையின் ஆசிரியர்) 
  • பி.எஸ்.நடராச பிள்ளை (மனோன்மணியம் சுந்தரனாரின் திருமகனார்) 
  • திவான்பகதூர் கோவிந்தப்பிள்ளை (திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்த இருமொழி அறிஞர்). 
  • எம்.சி நாராயண பிள்ளை-மலையாள அறிஞர் 
  • திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் கிடைத்த அல்லது தொடர்ந்த நட்புகள். 
  • எஸ்.முத்தையா பிள்ளை 
  • எம்.எஸ்.சுப்பையா முதலியார் 
  • சக்ரபாணி நம்பியார் 
  • கே.அனந்தராம ஐயங்கார் 
  • ஏ.வி.சுப்பிரமணிய ஐயர் 
  • சிதம்பர ராமலிங்கம் பிள்ளை 
  • பண்டிதர் வீரபாகுப்பிள்ளைஆதிமூர்த்தியா பிள்ளை 
  • வேதநாயகம் பிள்ளை 
  • டி.கே.சிதம்பரநாத முதலியார் 
  • சி.வீரபாகு பிள்ளை 


சென்னையில் 
  • வரலாற்றறிஞர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (சென்னைப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் 
  • ரா.இராகவையங்கார் 
  • மு.இராகவையங்கார் 
  • சி.ஆர்.நமச்சிவாய முதலியார் 
  • கி.வா.ஜகந்நாதன் 
  • ஏ.என்.சிவராமன் 

முதலான பல அறிஞர் பெருமக்கள். 

வித்துவான்.மு.சண்முகம் பிள்ளையவர்கள்  ஏறத்தாழ 15 ஆண்டுகள் பேராசிரியரோடு இணைந்து நீங்கா நிழல்போல் இருந்து பேராசிரியருக்கு அவர்தம் பணிகளில் உதவினார். 

பெற்ற விருதுகள் 

  • மதுரைத் தமிழ்ச்சங்கம் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய பி.ஏ தமிழ்த் தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறி சேதுபதி தங்கப்பதக்கம் பெற்றார். 
  • தமிழ்ப் பேரகராதிப் பணியைப் பாராட்டி, சென்னை அரசாங்கம் இவருக்கு இராவ்சாகிப் பட்டத்தை 1938-இல் அளித்துச் சிறப்பித்தது. 
  •  திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகப் (தற்போதைய கேரளப்பல்கலைக்கழகம்) பணியிலிருந்து பணிக்காலம் நிறைவு பெற்று சென்னை திரும்புகையில் திருவனந்தை வாழ் பொதுமக்கள் பேராசிரியருக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரை வழங்கினர். 
  •  தமிழ் எழுத்தாளர் சங்கம் 1955-இல் கவர்னர் ஸ்ரீபிராகாசா தலைமயைல் கேடயம் வழங்கிக் கௌரவித்தது. 
  • தமிழாய்வுலகம் பிள்ளையவர்களை ஆராய்ச்சி மன்னர் என்றும் ஆராய்ச்சி அறிஞர் என்றும் அழைத்து மகிழ்ந்தது. 
பேராசிரியர் சிறந்த ஆராய்ச்சியாளர். புலமையாளர். திறனாய்வாளர் , பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். இலக்கிய வரலாற்றுத் துறை, இலக்கியத் திறனாய்வு, ஒப்பியல் ஆய்வு, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கண ஆராய்ச்சி, நாட்டுப்புறவியல், பண்பாடு, மொழியாராய்ச்சி(மொழியியல்), மொழி வரலாறு, சுவடி-நூற்பதிப்பு(சுவடியியல்), அகராதித் தொகுப்பு(அகராதியியல்), வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளில் ஈடுபட்டவர். 

பேராசிரியர் மறைவிற்குப்பின் அவரது நூல்கள் பல ஆண்டுகளாகக் கிடைக்கப்பெறாத நிலையில் அவற்றைப் பொருளடிப்படையில் தொகுதிகளாக வெளியிடும் நோக்கில் வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம் அவரது திருமகளார் சரோஜினி அம்மையாரின் முயற்சியால் நிறுவப்பெற்றது. பேராசிரியர் அவர்களின் நெருங்கிய நண்பர் பத்மபூஷண் கே.சுவாமிநாதன் தலைமையில் இம்மன்றத்தில் தலைவராகச் செயல்பட்டார். 1989-இல் முதல் தொகுதியான இலக்கியச் சிந்தனைகள் என்ற நூல் வெளிவந்தது. தொடர்ந்து வெளிவந்த 6 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் 7 தொகுதிகள் வெளிவந்தன

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை எழுதிய நூல்கள் 

  • அகராதி நினைவுகள், 1959 ஆசிரியர் வெளியீடு 
  • ஆராய்ச்சியுரைத் தொகுதி பகுதி -1 Critical Essays in Tamil, 1930, ஆசிரியர் வெளியீடு 
  • இலக்கணச் சிந்தனைகள், 1956 பாரி நிலையம் 
  • இலக்கிய உதயம்-1 1950, 1954 தமிழ்ப் புத்தகாலயம் 
  • இலக்கிய உதயம்-2 1952 தமிழ்ப் புத்தகாலயம் 
  • இலக்கிய தீபம் 1952 பாரி நிலையம் 
  • இலக்கிய மணிமாலை 1954, 1957 தமிழ்ப் புத்தகாலயம் 
  • இலக்கியச் சிந்தனைகள் 1947, 1956 பாரி நிலையம் 
  • இலக்கிய விளக்கம் 1958 தமிழ்ப் புத்தகாலயம் 
  • உரைமணிமாலை 1951 ஆசிரியர் வெளியீடு 
  • கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, 1950 கம்பன் கழகம், காரைக்குடி 
  • கம்பன் காவியம் 1955, 1957, 1962 தமிழ்ப் புத்தகாலயம் 
  • சிறுகதை மஞ்சரி 1944 தினமணி வெளியீடு
  • 1958, 1962 தமிழ்ப் புத்தகாலயம் 
  • சொற்கலை விருந்து 1956 பாரி நிலையம் 
  • சொற்களின் சரிதம் 1956 பாரி நிலையம் 
  • தமிழ் இலக்கியச் சரிதத்தில் காவியகாலம் 1957, 1962, தமிழ்ப் புத்தகாலயம் 
  • தமிழ்ச் சுடர்மணிகள் 1949, 1952 குமரி மலர்க் காரியாலயம், 1959 பாரி நிலையம் 
  • தமிழர் பண்பாடு, 1949, 1951, 1955, 1958 தமிழ்ப் புத்தகாலயம் 
  • 1961, 1963,1968, 1974 
  • தமிழின் மறுமலர்ச்சி, 1947 நவபாரதி பிரசுராலயம் லிமிடெட், 1953 பாரி நிலையம் 
  • திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, (1946-இல் நாகபுரி அகில இந்திய கீழ்நாட்டுக் கலைஞரின் மகாநாட்டில் திராவிட மொழிப்பகுதி தலைமைப் பேருரை), 1946, மதராஸ் பிரீமியர் கம்பெனி பிரசுரம், சென்னை 
  • திராவிட மொழிகளில் ஆராய்ச்சி-(1946-இல் நாகபுரி அகில இந்திய கீழ்நாட்டுக் கலைஞரின் மகாநாட்டில் திராவிட மொழிப்பகுதி தலைமைப் பேருரை, 1951-இல் லட்சுமணபுரி அகில இந்திய கீழ்நாட்டுக் கலைஞரின் மகாநாட்டில் திராவிட மொழிப்பகுதி தலைமைப் பேருரை), 1956 தமிழ்ப்புத்தகாலயம் 
  • ராஜி (நாவல்) 1958 தமிழ்ப் புத்தகாலயம் 
  • History of Tamil Language & Literature 1956, 1958 நியூ.செஞ்சுரி புக் ஹவுஸ் 
  • Research in Dravidian Language 1946 The Tamil Nadu Publications, 1958, 1962 
  • சங்கநூற் புலவர்கள் பெயரகராதி 1930 சைவ சித்தாந்த மகா சமாஜ வெளியீடு 

பாடநூல் தொகுப்பு 

  • இலக்கிய மஞ்சரி முதல் புத்தகம்-பொதுப் பகுதி (நான்காம் பாரத்திற்குரியது) பாடநூல் தொகுப்பு, 1953, ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ் 
  • இலக்கிய மஞ்சரி இரண்டாம் புத்தகம்-சிறப்புப் பகுதி (நான்காம் பாரத்திற்குரியது) பாடநூல் தொகுப்பு, 1953, ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ் 
  • இலக்கிய மஞ்சரி இரண்டாம் புத்தகம்-பொதுப் பகுதி (ஐந்தாம் பாரத்திற்குரியது) பாடநூல் தொகுப்பு, 1953, ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ் 
  • இலக்கிய மஞ்சரி இரண்டாம் புத்தகம்-சிறப்புப் பகுதி (ஐந்தாம் பாரத்திற்குரியது) பாடநூல் தொகுப்பு, 1953, ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிடி ப்ரெஸ் 

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்களின் பதிப்பு நூல்கள் 

அகராதியும் நிகண்டுகளும் 

  • தமிழ்ப் பேரகராதி, 1936, சென்னைப் பல்கலைக்கழகம்  
  • அரும்பொருள் விளக்க நிகண்டு தமிழகராதியின் ஆதாரநூற்றொகுதி-2 அருமருந்தைய தேசிகர் 1931. மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, செந்தமிழ்ப் பிரசுரம்-54, மதுரை  
  • கயாதரம் 1939, சென்னைப் பல்கலைக்கழக சென்னை ஸர்வகலாசாலை வெளியீடு  
  • கைலாச நிகண்டு சூடாமணி-சக்தி இதழில் தொடராக வெளிவந்த்து, பிரமாதி ஆண்டு, ஐப்பசி முதல் வைகாசி வரையுள்ள (பங்குளி நீங்கலாக) மாத இதழ்கள், சக்தி காரியாலயம்  
  • நாமதீப நிகண்டு கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் தமிழகராதியின் ஆதாரநூற்றொகுதி-1 1930, பதிப்பாசிரியர் வெளியீடு 
  • பொதிகை நிகண்டு, தமிழகராதியின் ஆதாரநூற்றொகுதி-3 கல்லிடைநகர் சாமிநாதக் கவிராயர், 1934. பதிப்பாசிரியர் வெளியீடு 

இலக்கியம் 

  • சங்க இலக்கியம் (எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்) -2 தொகுதிகள் 1940 , சைவசித்தாந்த மகா சமாஜம் 
  • சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)-2 தொகுதிகள் 1967, பாரி நிலையம் 
  • திருமுருகாற்றுப்படை- புதிய உரை (மூலமும் உரையும்) (சேர்ந்து பதிப்பித்தது), 1933, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  •  திருமுருகாற்றுப் படை (உரையாசிரியருரையுடன்)- மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை 1943, செந்தமிழ்ப் பிரசுரம்-68 
  • புறத்திரட்டு 1938, சென்னை சர்வகலாசாலை 
  • திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது) 1933, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  • ஸ்ரீ திவ்யப்பிரபந்தம் முதலாயிரம் 1955, மர்ரே.எஸ்.ராஜம் 
  • பொருள்முருகாற்றுப்படை 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  •  அணிமுருகாற்றுப்படை 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  • வருமுருகாற்றுப் படை 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  • அருள்முருகாற்றுப்படை 1937 சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம் 

இலக்கணம் 

  • தொல்காப்பியம் (பொருளதிகாரம்-இளம்பூரணம்)-ஒன்பது இயல்களும் (..சியுடன் சேர்ந்து பதிப்பித்தது) 1935, வாவிள்ள இராமஸ்வாமிசாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை 
  •  தொல்காப்பியம் (பொருளதிகாரம்-இளம்பூரணம்) –மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் (..சியுடன் சேர்ந்து பதிப்பித்தது) 1935, 1936, வாவிள்ள இராமஸ்வாமிசாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை 
  • தொல்காப்பியம் பொருளதிகார முதற்பாகம் (நச்சினார்க்கினியம்) 1934 எஸ்.கனகசபாபதி பிள்ளை வெளியீடு 
  • நவநீதப்பாட்டியல் (உரையுடன்) நவநீதநடன் 1943, மயிலைத் தமிழ்ச்சங்கம்-1. சென்னை 
  •  களவியற்காரிகை 1931, பதிப்பாசிரியர் வெளியீடு 
  • பதினெண்கீழ்க்கணக்கு 
  •  இன்னா நாற்பது கபிலர் 1944, சக்தி காரியாலயம், தமிழ்ப் பதிப்பக வெளியீடு-2 
  • இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார், 1949, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம். சென்னை 
  • திரிகடுகமும் சிறுபஞசமூலமும் 1943, சென்னை சர்வகலாசாலை, எண்-15 சென்னை 
  •  நான்மணிக்கடிகை விளம்பி நாகனார் 1944, சக்தி காரியாலயம் தமிழ்ப் பதிப்பக வெளியீடு-1, சென்னை 

காப்பியம் 

  • கம்பராமாயணம் (யுத்த காண்டம்-முதல் மூன்று படலம்)1932 
  • கம்பராமாயணம் (பாலகாண்டம் முதல் ஏழு படலம்) 1933 ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரை வெளியீடு 
  •  சீவக சிந்தாமணி 1941, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  • நாடகம் 
  •  மனோன்மணீயம், 1922, இரண்டாம் பதிப்பு,பதிப்பாசிரியர் வெளியீடு 
  • சாத்தூர் நொண்டி நாடகம் சக்தி 1939, சக்தி காரியாலயம் 
  • ஸ்ரீபராங்குச நாடகம் (;ஆழ்வார் நாடகம்) 1936 ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரை வெளியீடு 
  • தூது 
  • தெய்வச்சிலையார் விறலிவிடு தூது குமாரசுவாமி யவதானி (MPS துரைசாமி முதலியாரோடு சேர்ந்து பதிப்பித்தது 1936 ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரை வெளியீடு-14 
  •  இராமலிங்கேசர் பணவிடுதூது. அஷ்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர் 1934 நவசக்தி மாலை-4வெளியீடு 
  •  வைத்தியநாத பிள்ளை மீது நெல்விடுதூது; 1933 நவசக்தி வெளியீடு 
  •  வெள்ளைய ராசேந்திரன் துகில்விடு தூது 1927, எஸ. முத்தையாபிள்ளை வெளியீடு 

மாலை 

  • தினகர மாலை என்னும் தினகர வெண்பா -1932 பதிப்பாசிரியர் வெளியீடு 
  • தென்திருப்பேரை சுவாமி மகரநெடுங்குழைக் காதர் திருப்பணிமாலை, 1933 ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரை வெளியீடு 
  • திருக்கோளுர் சுவாமி வைத்தமாநிதி திருப்பணிமாலை, 1933, ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரை வெளியீடு 

உலா 

  • இராஜராஜதேவருலா, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு 1924-25, செந்தமிழ்-23-ஆம் தொகுதி 
  • திருக்குறுங்குடி அழகிய நம்பியுலா 1932 , திருக்குறுங்குடி ஜீயர் மடம் 
  • முப்பந்தொட்டியுலா 1934 சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  • கோவை 
  • மதுரைக் கோவை நிம்பைச் சங்கர நாரணர், 1934, பதிப்பாசிரியர் வெளியீடு 
  • நாட்டுப்புறக் கதைப்பாடல் 
  •  ராமப்பய்யன் அம்மானை, 1934 நவசக்தி மாலை 1951, சென்னை சர்வகலாசாலை 
  • இரவிக்குட்டிப் பிள்ளை போர், 1951 சென்னை சர்வகலாசாலை 

பிற 

  •  பூகோள விலாசம், மருதூர் ஆபத்தாரணர் 1933 நவசக்தி பதிப்பாசிரியர் வெளியீடு 
  • சக்தி வகுப்பு 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  • கள வகுப்பு 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  •  சொரூப வகுப்பு 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  •  கர வகுப்பு, 1937, சித்தாந்தம் பத்திரிகை, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  •  திருவெழுகூற்றிருக்கை 1937, சைவசித்தாந்த மகா சமாஜம் 
  •  நரிவிருத்தம், 1945 

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்களின் ஆய்வுகள்-ஒரு பருந்துப்பார்வை 

பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை 12.10.81 இல் பிறந்தவர்மறைந்தது 1956-இல். 65 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில்  45  ஆண்டுகள் தமிழாய்வில்  ஈடுபட்டவர். 

    பேராசிரியர் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 
கட்டுரைகள் -250, 
நூல்கள் -25, 
பதிப்பித்த நூல்கள்-51. 
இலக்கியப் படைப்புகள் - கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், நாவல், சிறுகதைகள் 


o 1926-க்கும் 39-க்குமிடையே 21 நூல்கள் அவரால் பதிப்பிக்கப்பட்டன. 
சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியினைப் பத்தாண்டு காலத்தில் நிறைவு செய்து வெளிக்கொணர்ந்தார். 1,17,762 சொற்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் கொண்டது. 

o தமிழ்ப் பேரகராதிக்கு அவர் எழுதிய ஆங்கில முன்னுரையில் (History of Tamil Language and Literature) தமிழ் அகராதியின் வரலாற்றை முதல் நிகண்டான திவார நிகண்டிலிருந்து துவங்கி, கால வரிசைப்படி விளக்குகிறார். அகராதித் துறையில் முதன் முதலில் வெளிவந்த கருத்துக் கருவலமாகத் திகழ்கிறது. இந்த முன்னுரைதான் இன்றைக்கும் அகராதியியல் அறிஞர்களுக்கு வழிகாட்டி நூலாக விளங்குகிறது எனலாம். மேலும் அவர் பேரகராதியின் முன்னுரையிலே ‘இதில் குறைகளே இல்லை என்றாவது, இதனோடு அகராதி வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று என்றாவது நினைப்பது தவறு. இதிலும் பல குறைகள் உள்ளன. அகராதி வேலை மேலும் மேலும் நடைபெற்றுக்கொண்டே செல்ல வேண்டியதுதான்.” (தமிழின் மறுமலர்ச்சி பக். 426) என்று கூறுகிறார். 1936-இல் நிறைவுற்ற அந்தப் பேரகராதிக்குப் பிறகு 84 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த 75 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஒரு பேரகராதி இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அவர்காலத்தில் இல்லாத கணினித் தொழில்நுட்பம் உள்ள இந்தக்காலத்தில் பேரகராதியின் அடுத்த முழுமையான பதிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

o பேரா.சிவத்தம்பி அவர்கள் ‘இக்கால கட்டத்தில் தமிழின் இடைக்கால இலக்கியங்களின் பதிப்பு அதிகரிப்பதைக் காண்கிறோம். வையாபுரிப்பிள்ளை ஒருவரது பணியே இவ்வுண்மையை எடுத்துக்காட்டுவதாய் அமைகின்றது.” (இலக்கிய வரலாறு பக்.122) என்று குறிப்பிடுகிறார். 

o இவருடைய பதிப்புகளைப் பற்றி திரு.வி.க. ‘தமிழ்நாட்டுப் பதிப்பாசிரியர் உலகில் வான்மணி எனத் திகழ்வார்” என்று குறிப்பிடுகிறார். (திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள்:210) 

o சங்க இலக்கியம் என்பது எட்டுத் தொகையும் பத்துப்பாட்டுமே என்பதை முதன் முதலில் நிறுவி, 1940-இல் சமாஜப் பதிப்பாகச் சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தார். அதுகாறும் எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் என்றறியப்பட்ட நிலையிலிருந்து சங்க இலக்கியம் என்ற பெயரை நிலைநிறுத்தியவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையே. 

o 43 ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கப் பெற்ற பெருமையுடையது சங்க இலக்கியப் பதிப்பு. சங்கப் புலவர்கள் பாடல்களை ஒருசேரத் துய்க்கும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு அகராதிகளைப் பிற்சேர்க்கையாகக் கொண்டது. 

o சங்கப் பாடல்கள் பாடப்பெற்ற காலமும் அவை தொகுக்கப்பெற்ற காலமும் ஒன்றல்ல என்று முதலில் தெரிவித்தவர் இவரே. இக்கருத்து இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கருத்து. (தொ.பொ.மீ - - A History of Tamil Literature pp.34) 

o சங்க இலக்கியங்களுள் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவை பிற்பட்டவை என்ற இவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

o முச்சங்கங்கள் பற்றிய வரலாறு ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று என்ற பேராசிரியர் கருத்தை அறிஞர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர் (மு.வரதராசன். தமிழ் இலக்கிய வரலாறு பக்.29) 

o தொல்காப்பியர் சமணர் என்ற இவர் கருத்துக்கு மாறுபட்ட கருத்து இன்றுவரைத் தோன்றவில்லை. 

o தொல்காப்பியம் இளம்பூரணர் உரையை வ.வே.சு.ஐயருடன் இணைந்து முதன்முதலில் பதிப்பித்த பெருமைக்குரியவர். 

o களவியற்காரிகை என்ற இலக்கண நூலினை முதன் முதலில் பதிப்பித்த பெருமைக்குரியவர். இந்நூலின் பெயர்தானும் அவர் சூட்டியது. 

o பதிப்புகளை ஆராய்ச்சிப் பதிப்பு, மக்கள் பதிப்பு என இருவகைப்படுத்தி முதலாயிரத்தைச் சீர் பிரித்து மக்கள் பதிப்பாக மர்ரே எஸ். ராஜம் மூலம் வெளியிட்டார். இதன் விலை 1 ரூபாய். 

o அவருடைய புறத்திரட்டுப் பதிப்பு அதுவரையிலும் அகப்படாத பல இலக்கியச் செய்யுட்களைக் காண வழி வகுத்தது. வளையாபதி குண்டலகேசிச் செய்யுட்கள் பல கிடைக்கப்பெற்றன. 

o இந்திய வரலாற்றுக் கழகத்தின் வாயிலாக (Indian History Congress) இந்தியவரலாற்றுத் தொகுதியில் தமிழ் வரலாறு முதன் முதலில் எழுதியமை. 


o 1946, மற்றும் 1951-களில் அனைத்திந்தியக் கீழ்த் திசை மொழிகள் மாநாடுகளில் கலந்து கொண்டார். 


o 1951-இல் நடந்த மாநாட்டில் திராவிட மொழிப் பகுதிக்குத் தலைமை ஏற்றார். அப்போது, அவர் வெளியிட்ட ஆய்வு அட்டவணையில் ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கு மேற்கொள்ள வேண்டிய ஆய்வுப் பணிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியில் செய்ய வேண்டிய ஆய்வுகள் பற்றிய இந்த அட்டவணை (திராவிட மொழிகளில் ஆராய்ச்சி) அவரது இலக்கிய, மொழியாய்வின் ஆழத்தைக் குறிக்கும். 


o தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம் என்ற நூலில் தமிழில் காவியம் என்ற இலக்கிய வகை குறித்தும், காவியங்களின் தோற்றம், வளர்ச்சி, அவற்றின் ஒடுங்கு தசை ஆகியவற்றைக் குறித்தும் எழுதினார். 


o இவரது ஆராய்ச்சி முன்னுரைகள் இலக்கிய அங்கீகாரம் பெற்றவை. 


o தமிழ் இலக்கியத்தைச் சமுதாயத்தோடு பொருத்திப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் பேராசிரியர் முதன்மையானவர். இதனைக் கைலாசபதி போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்;. இலக்கியத்தைச் சமூகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அணுகுமுறையைப் பேராசிரியர் கீழ்க்கண்டவாறு தருகிறார். ‘ஒரு சமுதாயம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எவ்வகை இலக்கியத்தைக் கற்று மகிழ்ந்து இன்புறுமோ அவ்வகை இலக்கியம்தான் அவ்வக்காலத்து உண்டாவது இயல்பு. சமுதாயத்தின் நிலைக்கும் சூழ்நிலைக்கும் அவற்றில் உண்டாகும் இலக்கியத்திற்கும் மிக நெருங்கிய விட்டு விலகாத தொடர்பு உண்டு” (காவிய காலம்:22-23) 


o தொல்காப்பியர், திருவள்ளுவர் , மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சா, துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள், டி.கேசி முதலான 24 தமிழ் அறிஞர் பெருமக்களின் வரலாறுகளை எழுதியுள்ளார் தமது தமிழ்ச் சுடர்மணிகள் என்ற நூலிலே. 


o மொழி ஆய்விற்கு இலக்கிய வரலாற்று அணுகுமுறையும் ஒப்பியல் அணுகுமுறையும் தேவை என்பது இவர் கருத்து. 


o தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்கு மொழிநூல் ஆராய்ச்சி தேவை என்பதை வலியுறுத்தினார். 


o தமிழ்-மலையாளம் மொழித் தொடர்பு தாய்-மகள் தொடர்பு என்கிறார். 
பயிற்று மொழி பற்றிய கருத்துக்கள் 


தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தியவர் ‘நமது நாட்டில் தாய்மொழியைக் கைவிட்டு அந்நிய மொழியாகிய ஆங்கிலக் கல்வி போதித்து வரும் மடமையும் நன்கு புலப்பட்டது. தாய்மொழி மூலமாகத்தான் எல்லா வகைக் கல்வியையும் போதிக்க வேண்டும். தற்கால அறிவுத் துறைகள் எல்லாவற்றிலும் நூல்கள் நிரம்பி நமது மொழி சிறந்தோங்க வேண்டும். நமது மொழிச் செல்வம் பெருகுதல் வேண்டும். அதன் செல்வாக்கும் மிகுதல் வேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டில் அறிவு வளர்ந்தோங்குவதாகும். எல்லாவற்றிலும் முற்பட்டு விஞ்ஞான உணர்ச்சி நமக்கு வேண்டியதாகியுள்ளது. இதற்கு ஆங்கில மொழியைக் கற்பது இன்றியமையாதது. ஆங்கில மொழியைத் துணைமொழியாக நமது கலாசாலைகளில் போற்றுவதும் அவசியமே. மேனாட்டு விஞ்ஞான சாஸ்திரங்கள் பலவற்றிற்குத் தக்க தமிழ்ச் சொற்கள் காணுவது அருமை. வேண்டும் இடங்களில் ஆங்கிலச் சொற்களை எடுத்துக் கொள்ளுதல் பொருத்தமேயாம். இவ்வாறு செய்வது நமக்கு நன்மை தரும் என்றே நான் கருதுகிறேன். ஆனால் வேறு சிலர் இவ்வாறு கருதாது ஆங்கிலமே தலைமை பூண வேண்டும் என்று விவாதித்திருக்கிறார்கள். தமிழின் தலைமைக்கு இவர்கள் இடையூறாக நிற்பவர்கள். இவர்கள் கருத்துக்குத் தமிழ் மக்களாகிய நாம் ஒருபோதும் இணங்குதல் கூடாது." (தமிழின் மறுமலர்ச்சி பக்.60-61) என்று கருத்துரைக்கிறார். 


தாய்மொழி வழிக் கல்வியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
  • நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது நம் மனதும் மூளையும் வளர்ச்சியுற்று வரும் பருவமாகும். அப்பருவத்தில் நாம் அருமையாகப் போற்ற வேண்டிய சில ஆண்டுகளை அன்னிய மொழிகளைக் கற்பதிலேயே நாம் விரயம் செய்ய வேண்டியதாய் முடிகிறது. நம்பில் பலருக்கும் அவ்வகை அன்னிய மொழிக் கருவி ஒரு பாரமாக உள்ளது. அதன் மூலமாக நாம் பெறும் அறிவு உயிர்த் தத்துவம் அற்று ஞாபக மாத்திரையாய் அமைந்து விடுகிறது. முற்றும் உணரப்படாமல் அறிவோடு அறிவாய் ஒன்றிப் பெருகாமல் போய்விடுகிறது. (திராவிட மொழிகளில் ஆராய்ச்சி:பக்.6) 
  • தாய்மொழிக் கல்வி, மொழி வளர்ச்சிக்குத் துணை புரியும் என்ற கருத்தினையும் வெளிப்படுத்தியுள்ளார். ‘நமது தாய்மொழிகளை நமது கல்வியில் ஒவ்வொரு துறைக்கும் உற்ற உதவும் கருவியாக நாம் கொண்டாலன்றி, நமது மொழிகள் வளர மாட்டா: வளர்ந்து கொண்டே வரும் நமது தேவைகளுக்கு இவை (அன்னிய மொழிகள்) முற்றும் உதவமாட்டா. அறிவு வளர்ச்சிக்கும் பயன்பட மாட்டா. நமது மொழி போஷணையற்று மெலிந்து முடிவில் அழிந்துபோக நேரிடும்.” (தமிழின் மறுமலர்ச்சி:பக் 11) என்ற அச்சுறுத்தல் வெளிப்படுகிறது. 
  • நம்முடைய மொழிகளை நமது கல்வியில் ஒவ்வொரு மொழிக்கும் முற்ற உதவுங்கருவியாக நாம் கொண்டாலன்றி நமது மொழிகள் வளர மாட்டா: வளர்ந்து கொண்டே வரும் நமது தேவைகளுக்கு இவை முற்றும் உதவ மாட்டா: அறிவு வளர்ச்சிக்கும் இவை பயன்பட மாட்டா. நமது மொழிகள் போஷணையற்று மெலிந்து விரைவில் அழிந்துபோக நேரிடும்.” (காவிய காலம் பக்.282). 
  • ஆங்கிலம் உலக மொழியாக இருக்கும் இக்காலத்தில் ஆங்கிலம் கற்க வேண்டாமா என்ற கேள்விக்குப் பதிலிறுக்கிறார். ‘விஞ்ஞான உணர்ச்சி நமக்கு வேண்டியதாய் உள்ளது. இதற்கு ஆங்கில மொழியைக் கற்பது இன்றியமையாதது. ஆங்கில மொழியைத் துணைமொழியாக நமது கலாசாலைகளில் போற்றுவதும் அவசியமே.. தமிழ் மொழிவழிக் கற்கும்போது புதிய புதிய அறிவியல்-தொழில்நுட்பத் துறைகளுக்கான சொற்கள் தேவை. அவை தமிழில் இல்லாதபோது, வேண்டும் இடங்களில் ஆங்கிலச் சொற்களை எடுத்துக்கொள்ளுதல் பொருத்தமேயாம்.“ (தமிழின் மறுமலர்ச்சி பக்.61). ஆங்கில மொழிக் கல்வி வேறு: ஆங்கில மொழிவழிக் கல்வி வேறு என்பதை நன்குணர்ந்திருந்தார். ஆங்கில மொழிவழிக் கல்வி அவருக்கு உடன்பாடன்று. 
  • நாம் அறிவில் முன்னேற்றமடைய வேண்டுமானால் அது வழக்கில் நிலைத்து நின்று நமது உயிரோடு உயிராய்க் கலந்து ஒன்றிவிட்ட தாய்மொழியின் மூலமாகத்தான் அடைய இயலும்“ (தமிழின் மறுமலர்ச்சி:30) என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். அத்துடன் பயிற்று மொழியாகத் தமிழைச் சிறப்புறச் செய்யும் வழிமுறைகளையும் தருகிறார். 
  • விஞ்ஞான அறிவைத் தமிழ் மக்களிடையே பரப்புவதற்கும் அதனை மேன்மேலும் வளர்ப்பதற்கும் நமது தமிழ் மொழி வல்லதாதல் வேண்டும். அறிவுத் துறைகள் அனைத்திலும் தமிழில் நூல்கள் பிறத்தல் வேண்டும். நமது தமிழ் மக்களுக்கு விஞ்ஞான நோக்கு ஏற்படத் தமிழ் உதவுதல் வேண்டும்” (தமிழின் மறுமலர்ச்சி: 15) என்ற பேரவாவினை வெளிப்படுத்துகிறார்.

வடமொழி குறித்த பேராசிரியரின் கருத்துக்கள் 

  • ஒருவரது வாழ்வில் தாய்மொழிக்குரிய இடம்பற்றியும் பிறமொழிகள் பெற வேண்டிய இடம் பற்றியும் அவருக்குத் தெளிவான சிந்தனை உண்டு. தாய்மொழியாம் தமிழைப் பற்றிக் கூறுகையில் ‘நமது தாய் மொழிகளும் அவற்றிலுள்ள நூல்களும் வளத்திலும் தொன்மையிலும் வடமொழிக்குச் சமானவைகளாகும். தமிழ் மொழியை எடுத்துக்கொண்டால் இது மிகவும் உண்மை என்பது புலப்படும். தமிழிலுள்ள இலக்கியம் கிறிஸ்து சகாப்தத்திலேயே தோன்றத் தொடங்கியவை எனலாம். . . . .கவிதையின் பெருமையை நோக்கினாலும் நமது மொழிகள் வடமொழிக்கு ஒரு சிறிதும் பிற்பட்டவையில்லை. இவற்றால் நமக்குள்ள பெருமை நியாயமானதேயாகும்.“ என்கிறார். 
  •  வடமொழியை நாட்டின் பொதுமொழியாகச் செயல்படுத்தும் முறைகள் அவர் காலத்தில் நடைபெற்றபோது, ‘பத்திரிகைகளை வாசிப்பவர்கள் வடமொழியைத் தேசப் பொதுமொழியாக்க வெண்டுமென்றும் அதனை மத்திய அரசாங்கத்தார் இந்தியன் ஒவ்வொருவனுக்கும் கட்டாயப் பாடமாக ஏற்படுது;த வேண்டுமென்றும் பலரும் பல இடங்களிலும் வற்புறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றி வருவதை அறிவார்கள். இம்முயற்சி நமது நாட்டின் நலத்திறகும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் இடையூறு பயக்கும் என்பதைக் கூட நினைப்பவர்கள் இல்லை. எனக்கு வடமொழியில் நிரம்பிய பற்று உண்டு. அம்மொழியிலுள்ள கலைச்செல்வங்களைக் கற்று அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை மிக உண்டு. ஆனால், அது ஆராய்ச்சித் துறைக்குரிய மொழியேயன்றி, நாட்டின் முன்னேற்றத் துறைகட்குரிய மொழியன்று” (கம்பன் காவியம்:71) என்கிறார். 
  • வடமொழியை ஆராய்ச்சி நோக்கிலே கண்ட வையாபுரியார், அக்கால ஆராய்ச்சியாளர்கள் பலரும் வடமொழியைப் பெரிதாக மதிக்கும் போக்கையும் வடமொழி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கையும் கண்டித்துள்ளார் என்ற செய்தி கூட தமிழறிஞர் பலருக்குப் புதுமையாகத் தோன்றலாம். வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரு மொழிகளுக்குமுள்ள வேறுபாடு உயிர் நீங்கிய ஒருவனுக்கும் உயிருடனிருக்கும் ஒருவனுக்குமுள்ள வேறுபாட்டை ஒத்தது என்ற கருத்துடையவர்.” வட மொழி வழக்கிழந்த மொழி. வழக்கில் நின்று உயிர்த் தத்துவத்தோடு இருக்கும் தமிழ் மொழியே தமிழ் நாட்டில் தலைமை பெறுவதற்கு உரியதாகும்“ (தமிழின் மறுமலர்ச்சி: பக் 29) என்று அறிவிக்கிறார். 

ஆங்கிலம் குறித்த கருத்துக்கள்

  • ஆங்கிலத்திலே நல்ல புலமையுடையவரும், ஆங்கில நூல்களை நன்கு கற்று தமது தமிழாராய்ச்சிக்குப் பயன்படுத்தியவரும் ஆங்கிலத்திலே நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவருமான பேராசிரியர் ஆங்கிலத்தை ஒரு கருவி மொழியாகவே பயன்படுத்தினார். ஆங்கில மொழிப்பற்றாளராக ஒருபோதும் அவர் மாறியதில்லை. ஆங்கிலம் கற்றவர்கள் ஆங்கில மோகத்திற்கு ஆட்பட்டு தமிழை மறப்பதை, தமிழை மதியாதிருக்கும் போக்கைக் கண்டிக்கிறார்.
  • ஆங்கிலம் கற்ற ஒரு சில தமிழ் மக்கள் தமிழ் என்று கேட்டவுடனேயே வெறுப்புக்கொண்டு தமிழ் நூல்களைத் தொடுவதுகூடத் தமது கௌரவத்திற்கு அழிவு என்று கருதி வந்தார்கள். ஏகதேசமாய்த் தமிழ்ப் புஸ்தகங்களை வாசிக்கவோ அல்லது தமிழில் பேசவோ நேர்ந்து விட்டால், தமிழ்ச் சொற்களை ஆங்கிலத் தோரணையில் உச்சரித்துத் தம்மை ஆங்கிலேயர் என்று பிறர் கருதுமாறு நடித்து வந்தனர். சில தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழை டாமில் என்று உச்சரிப்பதைப் பலரும் கேட்டிருக்கலாம்.“ (தமிழின் மறுமலர்ச்சி:69) 
  • பிற நாடுகளில் அவ்வம்மொழியே தலைமையிடம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழ் நாட்டில் தமிழே முதன்மை மொழியாகத் திகழ வேண்டுமென்கிறார். ‘ஆங்கில நாட்டில் ஆங்கிலந்தான் முதன்மை பெறுகிறதேயன்றி இலத்தீனும் கிரேக்கமும் அல்ல. புராணக் கதைகளையும் அறிவுக்கு முரணான கருத்துக்களையும் கொண்ட வட மொழி இலக்கியத்தால் அஞ்ஞானக் கருத்துக்கள் பல தோன்;றி அறிவைக் கெடுத்து விடும்: ஆதலால் வடமொழிக்கு முதலிடம் கொடுப்பது தகாது” என்கிறார். 
  • இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் வடமொழியோடு தொடர்பு உண்டு. ஒரு காலத்தில் வடமொழி தலைமை பூண்டு விளங்கியது. ஆனால், தற்போதைய சூழலில் வடமொழி ஒரு பண்பாட்டு மொழியாகவும் ஆராய்ச்சி மொழியாகவும்தான் இருக்க முடியும். தாய்மொழிகள்தாம் தலைமை பூண வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ்தான் தலைமை மொழியாக இருக்க வேண்டும். தற்கால அறிவை உதவுவதற்குரிய மொழி உயிருடன் இருக்கும் தமிழ் மொழியேயாகும். அதுவே முதன்மை பெறத்தக்கது. அறிவுத் துறைகள் அனைத்திலும் தமிழில் நூல்கள் பிறத்தல் வேண்டும். நமது தமிழ் மக்களுக்கு விஞ்ஞான நோக்கு ஏற்படத் தமிழ் உதவுதல் வேண்டும்.” என்கிறார் (தமிழின் மறுமலர்ச்சி:பக்.26) என்ற நூலிலே. 

தமிழறிஞருக்குப் பிறமொழி அறிவு தேவை 

நமது தமிழ் மொழியின் இலக்கியச் சுவையை பெருமையையும் அறிய பிற மொழி இலக்கிய அறிவு தேவை என்பதை வலியுறுத்தியவர். 
  • நமது தமிழ் மொழியில் தோன்றியுள்ள இலக்கியத்தை ஆராய்ந்து உண்மையான மதிப்பீடு செய்வதற்கும் அதனை வளம்பெறச் செய்வதற்கும் பிறமொழி இலக்கிய உணர்;ச்சி நம்மவர்களுக்கு இன்றியமையாதது. நமது முன்னோர்கள் வடமொழி இலக்கியத்தை ஓரளவு கற்று வந்தனர். இடைக்காலத்தில் தெலுங்கு முதலிய மொழிகளைப் பயிலுவாராயினர். அரசியல் துறை முதலியவற்றில் இன்றியமையாததாய் நேர்ந்துவிட்ட ஆங்கில இலக்கியத்தை நாமும் பயின்று வருகிறோம். இதனைத் தவிர ஏனைய மொழிகளிலுள்ள இலக்கியத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுவது அவசியமாகும்.(இலக்கிய உதயம் முன்னுரை). இவ்வாறு ஒப்பிலக்கியத்தின் தேவையை வற்புறுத்திய பேராசிரியர், இலக்கிய உதயம் முதற்பகுதியில் எகிப்து, பாபிலோனியா, பாலஸ்தீனம், பாரஸீகம், சீன நாட்டு இலக்கியங்கள் பற்றி எழுதினார். இலக்கிய உதயம் இரண்டாம் பகுதியில் பாரத தேச இலக்கியங்கள் பற்றி எழுதினார். 
  • பல மொழி இலக்கியங்களைப் பற்றிய அறிவு தேவை என்பதை வலியுறுத்துகிறார். தமிழ் மொழி ஆய்வாளர்கள் இந்திய இலக்கியங்களைப் பற்றியும் பிற திராவிட இலக்கியங்களைப் பற்றியும் அறிய வேண்டும் என்ற கருத்தைக் கூறுகிறார். 
  • வியாசன், வால்மீகி, காளிதாசன் என்பவர்களைப் பற்றியும், வள்ளுவர், கம்பன் என்பவர்களைப் பற்றியும், பம்பா, ரம்பா, பொன்னா என்பவர்களைப் பற்றியும், எழுத்தச்சனைப் பற்றியும் அறியாதவனைத் திராவிட மொழிகளில் ஒன்றிலேனும் வல்லவன் என்று எவ்வாறு கூற முடியும்? திராவிட இலக்கியங்களையும் இந்திய இலக்கியங்களையும் ஒப்பு நோக்கிக் கற்றவனுடைய கல்வியறிவு மிகவும் பரந்துள்ளதாயும் இருத்தல் ஒருதலை”. என்பதை வலியுறுத்துகிறார். 

கால ஆராய்ச்சி குறித்த கருத்து 

கால ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைப் பேராசிரியர் ‘நூல் தோன்றிய காலத்தை அறிந்தாலன்றி அந்நூலிலுள்ள கருத்துக்களை நாம் முற்றிலும் அறிந்துகொள்ள முடியாது. இலக்கியச் சான்றுகளால் உயரப்படும் தேச சரித்திரமும் வரையறை எய்த மாட்டாது. தமிழ் மொழியின் சரித்திரமும் அறிதற்கு இயலாததாகும். தமிழ் நாட்டில் உலவிய கருத்துக்களின் வரலாறும் மயக்கத்திற்கிடமாகவே இருக்கும். ஆதலால் கால ஆராய்ச்சி மிகவும் இன்றியமையாததாகும்”. 

கால ஆராய்ச்சிக்கான சான்றுகளைக் குறிப்பிடுகையில் 

பழைய தமிழ் நூல்களின் காலத்தைத் துணிவதற்குரிய சரித்திரச் சான்றுகள் ஒரோ வழியின்றிக் கிடைப்பனவாகா. இச்சான்றுகள் கிடையாத வழி நூல்களின் அகச்சான்று கொண்டே காலந்துணிதல் இயலும். இவ்வகைச் சான்றுகளுள் முக்கியமானது சொல்லாராய்ச்சியாகும். (தமிழின் மறுமலர்ச்சி பக்.293) 


ஆராய்ச்சி என்று வரும்போது உணர்வு பூர்வமாகச் செய்திகளை நோக்காமல், அறிவு பூர்வமாகச் செய்தவர் என்ற பெருமை அவருக்குண்டு. தாம் ஆய்ந்தறிந்த உண்மைகளை விருப்பு வெறுப்பற்ற நிலையில் நின்றுகூற அவர் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை. இதனை அவரே வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

எனது நட்பு பிராமணர் - அல்லாதார் என்ற வேறுபாடுகளைக் கடந்தது; வடமொழி தமிழ் என்ற வேறுபாடுகளைக் கருதாதது; பண்டிதர்கள் ஆங்கிலம் கற்றவர்கள் என்ற சிறு வரம்புகளை மதியாதது; சைவம், வைஷ்;ணவம் முதலிய மத வேறுபாடுகளைக் கனவிலும் நினையாதது; சங்ககாலத் தமிழ், இடைக்காலத் தமிழ், தற்காலத் தமிழ் என்றவற்றில் ஏதேனும் ஒன்றில் அபிமானம் வைத்து அதனையே கற்பது என்ற நியதியைக் கொள்ளாதது. அறிவு வளர்ச்சியும் தமிழுணர்வுப் பெருக்கமும் உண்மை நாட்டமும் நடுநிலைமையுமே என்னை ஊக்கி வந்தன” என்று தம் ஆய்வு முறைமையை எடுத்துரைக்கிறார் அகராதி நினைவுகள் என்ற தம் நூலிலே. 

எதிர்காலத்தில் தமிழ் மொழி 

தமிழ் மொழி அமைப்பு எதிர்காலத்தில் எங்ஙனம் இருக்கக்கூடும் என்பதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் கணித்துக் கூறுகிறார். 
  • மொழி மக்களது அறிவு வளர்ச்சிக்கும் சமுதாய நிலைக்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு காலத்துக்குக் காலம் வேறுபடுகின்ற ஒன்றாகும். மொழி மக்களது வாழ்வின் போக்கிற்குத் தக்கபடி மாற வேண்டும். முன்காலத்தில் ஆசிரியர்கள் வாழ்க்கையின் சாயல் அதிகமில்லாத கவிதைகள் இயற்றினார்கள். தற்காலத்தில் நூற்பொருட்களுக்கும் வாழ்க்கை இயல்புக்கும் தொடர்புடைய நூல்கள் எழுதப்படுகின்றன. தற்காலத் தமிழில் மக்கள் வாழ்வுக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.. .. .. .. வருங்காலத்தில் தாய்மொழி தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவுடைமையாய் அமைந்து, மக்கள் வாழ்வோடு கலந்து புத்துயிர் பெறும். புதுக்கருத்துக்கள், சொற்கள், வாக்கியங்கள், அமைதிகள் முதலியன தம் இயல்பு கெடாதபடிப் பெருகி, சொற்களுக்குப் பொருள் வரையறையும் கருத்து வரையறையும் அறிவியல் பயிற்சியால் உண்டாகும்.” (கம்பன் காவியம்:பக்.163) 
  • சங்கப் பாடல்களை மொழிபெயர்த்த டி.கே.இராமானுஜம், பி.ஸ்ரீ.ஆசார்யா, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், கி.வா.ஜகந்தாதன், பெ.நா.அப்புஸ்வாமி, சா.கணேசன், க.அ.நீலகண்ட சாஸ்திரி, வே.வேங்கடராஜுலு ரெட்டியார், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி முதலான அறிஞர்கள் திரு.வையாபுரிப்பிள்ளையவர்களைப் பாராட்டி எழுதியுள்ளனர். 
  • டாக்டர் க. கைலாசபதி பேராசிரியர் குறித்து இலங்கை வீரகேசரி இதழில் ‘தமிழகம் கண்ட தலையாய ஆராய்ச்சியாளர்" என்ற தலைப்பில் ‘தன்னடக்கம், அமைதி, ஆடம்பரமின்மை, பிள்ளையின் ஆராய்ச்சியில் காணப்படும் பண்புகள். பிள்ளையின் முடிவுகளை ஏற்காதவர்களும் அவரின் ஆழ்நதகன்ற புலமையை மறுத்ததில்லை. வையாபுரிப்பிள்ளை, சாமிநாதையர், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகிய மூவரும் தமிழகம் கண்ட சிறந்த பதிப்பாசிரியர்கள். இவருள் காலத்தால் பிந்தியவர் வையாபுரிப்பிள்ளை. தம் முன்னோடிகளின் உழைப்புடன் தமது முயற்சிகளையும் சேர்த்துத் தலைசிறந்த ஆராய்ச்சியாளராக விளங்கினர். இன்னும் ஒரு வையாபுரிப்பிள்ளையைக் காணத் தமிழகம் வெகுகாலம் காத்திருக்க வேண்டும்."

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மேம். பேராசிரியர் வையாபுரி பிள்ளை ஐயா அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் அவரின் சாதனைகளைப் பற்றியும் இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டோம் மேம். வானத்தின் அளவு அவரின் சாதனைகள் நினைக்கையில் பெருமையடைகிறோம் மேம்.

முனைவர் ம. தனலெட்சுமி சொன்னது…

அம்மா வணக்கம். இக்கட்டுரையைப் படித்த பின்பு, தமிழ் மரபு கொண்ட மிகப்பெரிய ஆளுமையினால் நெறிப்படுத்தப்பட்ட பேறு கிடைக்கப்பெற்றதை உணர்கிறேன்.